2023ஆம் ஆண்டு அகிலஉலக கல்வி நாள் ஆப்கானிய பெண்களுக்கு சமர்ப்பணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் உடனடியாக மீட்டெடுக்கப்படவேண்டும், பெண்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2023ஆம் ஆண்டுக்கான அகிலஉலக கல்வி நாளினை ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் Audrey Azoulay
சனவரி 24 செவ்வாய்க்கிழமை அகிலஉலக கல்வி நாளை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள UNESCO வின் இயக்குநர் ஜெனரல் Audrey Azoulay அவர்கள், கல்விக்கான அடிப்படை உரிமையை உடனடியாக மீட்டெடுப்பதற்கான அழைப்பை புதுப்பிக்கும் நாளாக இந்நாள் கொண்டாடப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் எந்த நாடும் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கக்கூடாது என்றும், கல்வி என்பது ஓர் உலகளாவிய மனித உரிமை, அது மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய Audrey Azoulay, ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமைகள் தாமதமின்றி மீட்டெடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு அகில உலகிற்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அகில உலக கல்வி நாளை முன்னிட்டு, ஜனவரி 24 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், ஐநா பொதுச் சபையின் தலைவர் மற்றும் யுனெஸ்கோவின் இயக்குநர் ஆகியோரின் பங்களிப்புடன் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நிகழ்வில் முதல் குழு விவாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்படும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தற்போது, 80 விழுக்காடு, பள்ளி வயதுடைய ஆப்கானிய சிறுமிகள் மற்றும் பெண்கள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர் என்றும், அவர்களில் 40 விழுக்காடு பேர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என்றும் தகவல்கள் அறியவருகின்றன. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், நாட்டின் சவாலான சூழ்நிலைகளில் கல்வியின் தொடர்ச்சியை ஆதரிக்க யுனெஸ்கோ அதிகமாக முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்