கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவு ஒளியில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவு ஒளியில்  

வாரம் ஓர் அலசல் – திருவள்ளுவர்நாள் மற்றும் ஜல்லிக்கட்டு

1971ஆம் ஆண்டு முதல் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருவள்ளுவர் நாள் மற்றும் ஜல்லிக்கட்டு

மெரினா ராஜ் – வத்திக்கான்

இரண்டடியில் ஏழடி சீர் படைத்து மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்தவர், அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று இயல்களையும், சுவை குன்றாது பகிர்ந்தளித்தர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தைத்திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கலன்று திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. ஏடில்லா காலத்தில் எழுத்தானி கொண்டு, ஓலைச்சுவடியில் ஒப்பற்ற வார்த்தைகளை வரிகளாக வடித்த வார்த்தை வித்தகராம் பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் பற்றியும் தமிழ்நாட்டின் வீர விளையாட்டாம் சல்லிக்கட்டு பற்றியும் இன்றைய நம் நிகழ்வில்காணலாம்.

அரசியலையும், அறிவியலையும் அன்றே அத்தனை மக்களும் பொருளுணர்ந்து பின்பற்றி வாழ வார்த்தைகளில் வழி வகை செய்தவர். வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என பாருலகம் பெருமை கொள்ளும் வகையில் சொற்களால் புதிய சரித்திரம் படைத்தவர் திருவள்ளுவர். 1333 திருக்குறள்கள் வழியாக வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர். பண்டைய காலம் முதல் இக்கால கவிஞர்கள் வரை தங்களது சொற்பொழிவுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசாதவர் எவரும் இலர் என்றால் அதுமிகையாது. மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு' தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தனர். அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

சமணர் என்றும் சைவர் என்றும் சிலரால் அழைக்கப்படும் திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி எனக் கூறப்பட்டு விழா எடுக்கப்பட்டு வந்த நிலையில், 1971ஆம் ஆண்டு முதல் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளில் திருவள்ளுவர் பற்றிய கவிதை, கதை, கட்டுரை, சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் பொங்கல் விழா சிறப்பின் போது கொண்டாடப்படுகின்றன. வள்ளுவர் கோட்டம் என்றழைக்கப்படும் 1976 ஆம் ஆண்டு சென்னையில் கட்டப்பட்ட திருவள்ளுவரின் நினைவகத்திற்கு  இந்நாளில், மக்கள் திரளாக வருகை தருவார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இந்நாளில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது அற்புதமான பங்களிப்புக்கு மரியாதையும் செலுத்துகின்றனர். வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணையும் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

மாட்டுப்பொங்கலுக்காகத் தன் காளையைத் தயார் செய்யும் மனிதர்
மாட்டுப்பொங்கலுக்காகத் தன் காளையைத் தயார் செய்யும் மனிதர்

தமிழ் நாட்டின் வீரவீளையாட்டு சல்லிக்கட்டு

வீரம் தமிழர்களின் தாரக மந்திரம். வீரத்தை சிலர் சொல்லாலும் சிலர் செயலாலும் வெளிப்படுத்துவர். ஆனால் தமிழர்களாகிய நாமோ நமது வாழ்க்கையையே வீரத்துடன் வாழ்பவர்கள். கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம் புல்லாளே, ஆய மகள் என்ற சங்க இலக்கிய வரிகள் வீரமுள்ள ஆண்மகனையே அக்காலப் பெண்கள் விரும்பித் தேர்ந்து மணமுடித்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றது. உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை, உறையும் வீடு என அனைத்தையும் வீரத்தால் உருவாக்கி உயர்வடைந்தவர்கள் தமிழர்கள். அத்தகைய தமிழர்களின் வீர விளையாட்டு சல்லிக்கட்டு.  

தொடக்க காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய நாணயத்தின் பெயர் சல்லி என்று அழைக்கப்பட்டது. நடுவில் சிறுதுளையுடைய வட்டவடிவ நாணயமான சல்லியைத் தமிழர்கள் தங்களது உழவிற்கும் தொழிலிற்கும் பயன்படும் எருதுகள் பசுக்கள், மற்றும் ஏனைய கால் நடைகளின் கழுத்தில் புளிய மரத்து விளாரால் வளையம் போல செய்துகட்டித் தொங்கவிட்டனர். நிலத்தை உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அக்கால்நடைகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்கள் பொங்கல் திருவிழாவிற்கு மறுநாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலின் போது அதிகமான சல்லிகளை காளைமாட்டின் கழுத்தில் துணிகளால் கட்டி அலங்கரிப்பர். வீரமுள்ள ஆண்மகன்கள் அக்காளைகளை அடக்கி அப்பரிசினைப் பெற்று அக்காளைகளுக்கு சொந்தமான எஜமானரின் மகள்களையும் திருமணம் செய்து கொள்வர். இத்தகைய சிறப்பு மிகுந்த வீர வீளையாட்டை இன்று வரை தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர். சல்லிக்கட்டு என்றழைக்கப்பட்ட இவ்விளையாட்டு மருவி ஜல்லிக்கட்டு என்று இக்காலத்தில் அழைக்கப்படுகின்றது.      

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் சல்லிக்கட்டு விளையாட்டு இன்றளவும் நடைபெற்று வருகின்றது. சல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் இந்நாளில் நடத்தப்படுகின்றன. மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் தங்களுடைய சாதி, மதம் போன்ற வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடி புதிய அறுவடைக்கு நன்றி கூறியும், புதிய ஆண்டை வரவேற்றும்  இந்நாளைக் கொண்டாடுகின்றனர். மாட்டுப் பொங்கல் தமிழகத்தில் மட்டுமன்று, கா்நாடகா, ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்னும் இவ்விளையாட்டு தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. தொடக்க காலத்தில் மாடுகளை அதிகமாகப் பயன்படுத்தும் கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றுத் திகழ்கின்றது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்பவருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வது போலவும் விளையாடுகின்றார்கள்.

முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் எனக் கண்டறியும் போது ஏற்கனவே திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டதாலும், வேறு சமுகத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ள முயற்சி செய்ததாலும் கைவிடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகவும், கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000ஆம் ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.

அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில மேலைநாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்ற போதிலும், அவை விளையாட்டாகவே நடக்கின்றன. கலாச்சாரம் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக விளங்கவில்லை. ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, எருதுப்பிடி என்றழைக்கப்படும் இவ்விளையாட்டில் காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணில் வீழ்வான். கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல். தோல்வியின் அறிகுறி.

ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டுக் கீழே விழுவர். உடல் பாகங்களில் அடிபடுவர். காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இருப்பினும் இன்று வரை இவ்வீர விளையாட்டு சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளோடும் விதிமுறைகளோடும் நடைபெற்று வருகின்றது. இன்றைய நாளில் உழவுக்கு வந்தனை செய்து, உழதவனுக்கும் உதவிய கால் நடைகளுக்கும் பெருமை சேர்க்கும் அனைத்து அன்புள்ளங்களையும் நினைத்து உளம்மகிழ வாழ்த்துவோம் நன்றி கூறுவோம். வாழ்க்கை நெறிமுறைகளைக் குறளாக வடித்த வள்ளுவப் பெருந்தகைக்கும், விவசாய வாழ்க்கைக்கு உதவும் கால் நடைகளுக்கும் வணக்கத்தை தெரிவிப்போம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் நாள் மற்றும் மாட்டுப் பொங்கல் நாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2023, 13:42