புதன் மறைகல்வியில் பங்கேற்ற உக்ரேனிய சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைகல்வியில் பங்கேற்ற உக்ரேனிய சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

உக்ரேனிய குழந்தைகளுக்கு அமைதி தேவை : Andrea Iacomini

உக்ரேனிய குழந்தைகளை மீட்கவும், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நாம் உதவிட வேண்டும் : யுனிசெப்பின் செய்தித்தொடர்பாளர் Andrea Iacomini

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் நிகழ்ந்து வரும் ஓராண்டு போரின் விளைவாக, அந்நாட்டில், 78 இலட்சக் குழந்தைகள் விளையாட்டு, கல்வி மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் யுனிசெப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் Andrea Iacomini

உக்ரேனில் நிகழ்ந்து வரும் ஓராண்டுப் போரில், 438 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 854 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், நாட்டில் ஏறத்தாழ 34 இலட்சக் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளார் Iacomini

மேலும் 15 இலட்சக் குழந்தைகள் மனச்சோர்வு, பதட்டம், மனஉளைச்சல் மற்றும் பிற மன நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும், 5 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நலப்பணிகளுக்கான கட்டிடங்களும், 2,300-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார் Iacomini.

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் வேளை, உலகம் நிலையற்றது, கணிக்க முடியாதது மற்றும் பயங்கரமான இடமாக இருக்கக்கூடும் என்பதை உக்ரேனிய குழந்தைகள் உணர்ந்துள்ளனர் என்று எடுத்துக்காட்டியுள்ள Iacomini அவர்கள், அடிப்படை பாதுகாப்பற்ற நிலை, குழந்தைகளின் கற்றல் மற்றும் உணர்வுகள் மற்றும் சமூக வளர்ச்சியில் பேரழிவின் விளைவை ஏற்படுத்துகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் ஏற்கனவே உக்ரேனிய குழந்தைகளின் ஓராண்டு வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது என்றும், அவர்களின் எதிர்காலத்தைப் பறிக்க இனியும் நாம் அனுமதிக்க முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ள Iacomini அவர்கள், இன்றைய நிலையில், உக்ரேனிய குழந்தைகளுக்கு அமைதி தேவை என்றும், அவர்களை மீட்கவும், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நாம் உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2023, 14:31