வாரம் ஓர் அலசல் – சர்வதேச இணையதள பாதுகாப்பு நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இணையம் என்றால் என்ன என்று அறிமுகம் தேவையில்லாத அளவுக்கு, இன்று அளவின்றி பரந்து பரவியுள்ளது தான் இணையம். இல்லம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் இங்கு இணையம் இல்லாதவர்களைக் காண முடியாது. பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் இருக்கும் பழுத்த மனிதர் வரை இணையத்தின் செயல்பாடுகளும் பயன்பாடுகளும் அனைவரையும் கவர்ந்திழுக்கின்றன. இணையத் தொடர்பு இல்லா வீடும் இல்லை; அலுவலகங்களும் இல்லை. படிப்பறியாதவர்கள் கூட, தங்கள் வியாபாரத்திற்காக இணையத்தைப் பயன்படுத்துமளவு இணையத்தின் பயன்பாடுகள் எண்ணற்றவையாக உள்ளன. பயன் பல நூறு என்றாலே இலவச இணைப்புக்களாக பல இன்னல்களும் வந்து தான் ஆகும். அவ்வகையில் உலகம் முழுவதும் உள்ள பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் இணையத்தில் சில தீமைகளும் உள்ளன. இவற்றைக் கண்டறிந்து முள் நீக்கி மீன் சாப்பிடுவது போல, இணையத்தைப் பக்குவமாய்க் கையாளவேண்டும் என்பதற்காகவே இந்த இணையதள பாதுகாப்பு நாள்.
இணையதள பாதுகாப்பு நாள் என்பது ஐரோப்பிய ஐக்கிய நாடுகளால் 2004 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சர்வதேச விழிப்புணர்வு நாளாகும். இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களைக் கண்டறிந்து மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தின் இரண்டாவது நாளில் சர்வதேச இணையதள பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகின்றது அவ்வகையில் இவ்வாண்டு (2023) பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிக பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தங்கள் படைப்புக்களைத் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர். உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுதோ தேவையான ஒன்றை அல்லது கருத்தை, ஒருவர் பற்றிய தகவல்களை, தெரிந்துகொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்க கருவியான அலைபேசி, திறன்பேசி, நுண்ணரிபேசி, மடிகணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தி வாழ, இணையதள பாதுகாப்பு நாள் பற்றிய தனது கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்பவர் சலேசிய சபை அருள்பணியாளரான எல் ஆரோக்கியதாஸ் அவர்கள். இன்றைய மன்னா என்னும் வலையொளியின் நிறுவனரான இவர், இவ்வலையொளி நிகழ்ச்சிகளின் வழியாகக் கிறிஸ்துவின் நற்செய்தியை இளம்உள்ளங்களில் விதைத்தும் வளர்த்தும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். மறையுரைச் சிந்தனைகளின் வழியாக மகத்தான கருத்துக்களை எடுத்துரைக்கும் அருள்பணியாளர் ஆரோக்கியதாஸ் அவர்கள், தற்போது திருவண்ணாமலை தொன்போஸ்கோ சிகரம் இல்லத்தின் இல்லத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிற்பி கருங்கல்லைச் செதுக்கி அழகுச்சிலையாக்குவதுபோல, ஒவ்வொருவரும் தத்தமது படைப்பாற்றல், கற்பனை, மற்றும் திறமைகளைப் பொறுத்து, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தின் தீமைகளைப் புறந்தள்ளி, நன்மைகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது அதனைப் பயன்படுத்துவோர் கையில் மட்டுமே உள்ளது. பெரியோரின் சில வாக்குகள் இன்றைய வாழ்வில் இணையத்திற்கும் பொருந்தும் என்பதால் அவற்றின் படி வாழ முயல்வோம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கத்தி, மின்சாரம் போல கவனமாகப் பயன்படுத்த வேண்டியவற்றின் வரிசையில் இணையதளமும் இப்போது இணைந்துவிட்டது.“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப இணையதளத்தை. அளவோடு பயன்படுத்துவோம். பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே என்பது நேரில் பேசிக்கொள்வதற்கான அறிவுரை. நேரில் இருவர் பேசிக் கொள்வதற்கே இப்படியொரு அறிவுரை என்றால், இணையம் போன்ற பொதுத்தளங்களில் தனிப்பட்ட விபரங்களைப் பகிரும்போது இன்னும் அதிகமான கூடுதல் கவனம் தேவை. ‘ இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கொட்டிக்கிடக்கும் ஏராளமான தகவல்களில் தகுதியான, நம்பகத்தன்மை மிகுந்த தளங்களையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவோம் நமது வாழ்விற்கு பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, கணினிக்கும் பாதுகாப்புச் சுவர் முக்கியம் என்பதை உணர்ந்து கவனமுடன் செயல்படுவோம்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் - 666)
என்ற குறளின் வழியில் உறுதியுடன் செயல்படுவோம். அனைவருக்கும் இனிய சர்வதேச இணையதள பாதுகாப்பு நாள் நல்வாழ்த்துக்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்