பாதிக்கப்பட்டுளோர் தங்கியுள்ள முகாம்கள் பாதிக்கப்பட்டுளோர் தங்கியுள்ள முகாம்கள்   (ANSA)

துருக்கியில் நிலநடுக்கத்தால் துயருறும் குழந்தைகள்:யுனிசெப்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் விரைவில் கல்வி கற்றலுக்குத் திரும்புவதை உறுதிசெய்யும் முயற்சியில் யுனிசெப் ஈடுபட்டுள்ளது : Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் 25 இலட்சக் குழந்தைகளுக்கு அவசரமாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார் யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell

கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கியில் இரண்டு நாள் கள ஆய்வுப் பணியை பிப்ரவரி 28, இச்செவ்வாயன்று முடித்த வேளை, இவ்வாறு தெரிவித்துள்ள Russell, சுகாதார கருவிகள், குளிர்கால உடைகள், வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உயிர்காக்கும் பொருள்களுடன் 1,63,000 குழந்தைகள் உட்பட இதுவரை கிட்டத்தட்ட 2,77,000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் குழந்தைகளுக்கு மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும், நகரங்களையும் தெருக்களையும் நாம் சுற்றி வரும்போதே இதனை கண்டுணர முடிகிறது என்று கூறியுள்ள Russell, குறிப்பாக, கடுங்குளிரில் குழந்தைகளும் மக்களும் அதிகமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் விரைவில் கல்வி கற்றலுக்குத் திரும்புவதை உறுதிசெய்யும் முயற்சியில் யுனிசெப் ஈடுபட்டுள்ளது என்றும் பள்ளிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, உடனடியாக அவற்றை சரிசெய்வதற்கும், தற்காலிக கற்றல் இடங்களை உருவாக்குவதற்கும் அந்நிறுவனம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

துருக்கியில், 5 இலட்சம் குழந்தைகள் உட்பட 30 இலட்சம்  மக்களை அத்தியாவசிய உதவி, தண்ணீர், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு மனிதாபிமான பண உதவி சென்றடைய 196 million  அமெரிக்க டாலர்களைக் கோரியுள்ளது (828.45 இலட்சம்) யுனிசெப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2023, 14:15