குடிநீரைப் பெற செல்லும் நைஜீரிய மனிதர் குடிநீரைப் பெற செல்லும் நைஜீரிய மனிதர்   (ANSA)

தண்ணீர் நெருக்கடியால் ஆபத்தின் பிடியில் நைஜிரியா!

உலகளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைச் சந்திக்கும் 163 நாடுகளில் நைஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது : Jane Bevan

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடியால் 7 கோடியே 80 இலட்சம் குழந்தைகளின் உயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்  UNICEF-பிற்கான நைஜீரியாவின் நீர் மற்றும் சுகாதார அதிகாரியான Jane Bevan.

மார்ச் 22, இப்புதனன்று நியூயார்க்கில் உலகத் தண்ணீர் மாநாடு தொடங்கியுள்ள வேளை, இதில் பங்குபெறும் உலகத் தலைவர்கள் மற்றும் துறை நிறுவனங்களிடம், நைஜீரியாவில் நிலவும் தண்ணீர் நெருக்கடிக்குத் தீர்வு காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் Bevan.

நைஜீரியாவில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு வீட்டில் அடிப்படைத் தண்ணீரும், மூன்றில் இரண்டு பேருக்கு அடிப்படை நல வசதியும் கிடைப்பதில்லை என்று அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள Bevan,  இதன் விளைவாக ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்களால் குழந்தை இறப்புகளைக் கொண்ட 10 நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாக உள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

உலகளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைச் சந்திக்கும் 163 நாடுகளில் நைஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், இதன் காரணமாக அளவுக்கு அதிகமான வறட்சியையும், அதேவேளையில் பெருவெள்ளத்தையும் இங்குள்ள மக்கள் சந்திப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளளார் Bevan.

உலகளாவிய காலநிலை நிதி, நீர் மற்றும் நலத்துறை மற்றும் சமூகங்களில் காலநிலை பின்னடைவை வலுப்படுத்துதல், அமைப்புகளின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் நீர் மற்றும் நலப்பணிகளை வழங்குவதற்கான திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை விரைவாக அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் Bevan

தற்போதைய வேகத்தில் நாம் தொடர்ந்தால், நைஜீரியாவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க 16 ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ள Bevan, நம்மால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது, மாறாக, இது விரைந்து செயல்படவேண்டிய தருணம் என்றும் அவ்வறிக்கையில் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 14:10