சூடான் இராணுவ வீரர்கள் சூடான் இராணுவ வீரர்கள் 

சூடானில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

சூடானில் நிகழ்ந்துவரும் மோதல் காரணமாக 2,50,000-க்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று அண்டை நாடுகளான தெற்கு சூடான் மற்றும் சாட் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்ல நேரிடும் : ஐ.நா.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானில் உள்ள பிரிவினைவாதக் குழுக்கள் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்றும், ஏப்ரல் 24, திங்கள் பிற்பகல் நிலவரப்படி அது நடைமுறைக்கு வந்தது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அண்மைய போர்நிறுத்த முயற்சியானது,  நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே மூன்று நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பின்னர் ஏப்ரல் 24,  இத்திங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த மோதல் காரணமாக, தலைநகரில் வசிப்பவர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளனர். மேலும் மோதலில் இதுவரை ஏறத்தாழ 450 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்பட்டாலும், அதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

கடந்த சில நாள்களாகத் தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்ற அனைத்து நாடுகளும் விரைந்து செயல்பட்டு வருகின்றன என்றும்,  விமானங்கள் மூலம் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் செய்திகள் விவரிக்கின்றன.

முன்னதாக, போலியோ மற்றும் தட்டம்மை உள்ளிட்ட நோய்களின் மாதிரிகளை வைத்திருப்பதாக நம்பப்படும் ஒரு ஆராய்ச்சி ஆய்வகத்தை போராளிகள் கைப்பற்றிய பின்னர், உலகச் சுகாதார அமைப்பு (WHO) உயிரியல் அபாயத்தின் அதிக ஆபத்து பற்றி எச்சரித்துள்ளது.

மேலும், 2,50,000-க்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று அண்டை நாடுகளான தெற்கு சூடான் மற்றும் சாட் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்ல நேரிடும் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 14:32