தன் குழந்தையுடன் உக்ரைன் பெண்  தன் குழந்தையுடன் உக்ரைன் பெண்   (ANSA)

உக்ரைனுக்கு போலியோ தடுப்பூசிகளை வழங்கியுள்ளது யுனிசெப்

தடுப்பூசி திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 2022-ஆம் ஆண்டில், உக்ரைனுக்கு 20 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்முயற்சியின் (GPEI) ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 6,50,000-க்கும் மேற்பட்ட போலியோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்று கூறியுள்ளது யுனிசெப் அமைப்பு.

இவற்றில் 5,43,000 அளவுகள் வாய்வழி போலியோ தடுப்பூசியாகவும் (OPV), 1,10,160 அளவுகள் செயலிழக்க போலியோ தடுப்பூசியாகவும் (IPV) வழங்கியுள்ளதாக யுனிசெப் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த உக்ரைனுக்கான யுனிசெப்பின்  பிரதிநிதி Murat Sahin, இந்தக் கடினமான நேரத்தில் தடுப்பூசி சேவைகள் உட்பட உக்ரைனின் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்த யுனிசெப் நிறுவனம் உறுதிகொண்டுள்ளது என்றும், போலியோவுக்கு சிகிச்சை இல்லை, ஆனால் தடுப்பூசி வழியாக அதை திறம்பட தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

உக்ரைனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போரின் பின்னணியில் பார்க்கும்போது, போலியோ தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்றும், இடம்பெயர்தல் மற்றும் புலம்பெயர்தல் காரணமாக, மக்கள் வழக்கமாகப் பெறவேண்டிய தடுப்பூசிகளையும் மருத்துவ உதவிகளையும் சரியான நேரத்தில் பெற முடியவில்லை என்றும் கவலை தெரிவித்த Sahin அவர்கள், இந்நிலை நோய் பரவுவதிலிருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பதை கடினமாக்குகிறது என்றும் கூறினார்.

தடுப்பூசி திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 2022-ஆம் ஆண்டில், உக்ரைனுக்கு 20 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது யுனிசெப் நிறுவனம். மேலும் தடுப்பூசி செயல்முறையை உறுதிப்படுத்த,  2023- ஆம் ஆண்டில் 35 இலட்சம் ஊசிகளை (syringes) வழங்கியுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2023, 14:39