வட ஆப்பிரிக்காவில் புலம்பெயரும் பெண்குழந்தைகளின் பிரச்சனைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வட ஆபிரிக்காவில் உள்ள மூன்று இளம்பெண்களில் ஒருவர் லிபியா, துனிசியா மற்றும் மொராக்கோ அல்லது இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்குப் புலம்பெயரும்போது பாலியல் முறைகேடு மற்றும் வன்முறைக்கு ஆளாகிறார் என்று Save the Children என்ற அனைத்துலக அமைப்பு தெரிவித்துள்ளது.
'வட ஆப்ரிக்காவில் புலம்பெயரும் பெண்கள்' என்ற தலைப்பில் சாமுவேல் ஹால் மையத்துடன் இணைந்து நடத்தியுள்ள இந்த ஆய்வில் இவ்வாறு தெரிவித்துள்ள Save the Children என்ற அமைப்பு, மோதல்கள், வன்முறைகள், குடும்பச் சிதைவு, வேலை வாய்ப்பின்மை மற்றும் கட்டாயத் திருமணங்கள் ஆகியவை பெண்களை இடம்பெயரத் தூண்டும் காரணிகளாக அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
வட ஆபிரிக்காவில் மூன்று புலம்பெயர்ந்த இளம்பெண்களில் ஒருவர் பாலியல் முறைகேட்டிற்கு அல்லது பிற பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார் என்றும், அதேவேளையில், அவர்கள் பிறப்பிடமாகிய சொந்த நாட்டை விட்டு வெளியேறிச் சென்று வேறு இடங்களில் சிறந்த எதிர்காலத்தை தேடுகிறார்கள் என்றும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் ஏறத்தாழ 28 கோடியே 10 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக உள்ளனர் என்றும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் புலம்பெயர்ந்து செல்வோரில் குழந்தைகள்தாம் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
வட ஆபிரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் புலம்பெயர்ந்து செல்லும் சிறுமிகளின் அனுபவங்களைப் பற்றிய முழுமையான அறிக்கையை வழங்குவது இதுவே முதல்முறை என்றும் இவ்வமைப்பு தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்