உலகளவில் குழந்தைத் திருமணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 3, இப்புதனன்று வெளியிடப்பட்ட யுனிசெஃப் அமைப்பின் புதிய ஆய்வறிக்கைபடி, உலகளவில் 64 கோடி இளம் பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட கடைசி ஆய்வறிக்கையிலிருந்து குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொள்ளும் இளம் பெண்களின் விழுக்காடு 21 இருந்து 19 - ஆக குறைந்துள்ளது என்றும், இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிலையான வளர்ச்சி இலக்கை அடைய உலகளாவிய குறைப்பு 20 மடங்கு வேகமாக இருக்க வேண்டும் என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த யுனிசெஃப் நிறுவன இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், உலகம் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது, இது பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சிதைக்கிறது என்றும், குறிப்பாக, மாணவிகளாக இருக்க வேண்டியவர்கள் மணப்பெண்களாக மாறியுள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் நலவாழ்வு நெருக்கடிகள், அதிகரித்து வரும் ஆயுத மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் பேரழிவுகள் ஆகியவை பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்வதில் தவறான வழியைத் தேடுவதற்கு அவர்களின் குடும்பங்களைக் கட்டாயப்படுத்துகின்றன என்று விளக்கியுள்ள ரஸ்ஸல், இதன் காரணமாக, கல்வி மற்றும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் உரிமையை உறுதி செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைத் பருவத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றம் சாத்தியம் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். ஆனாலும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தொடர்ந்து ஆதரவுத் தேவைப்படுகிறது என்று உரைத்துள்ள ரஸ்ஸல், பெண்களைப் பள்ளியில் படிக்க வைப்பதிலும், பொருளாதார வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்