சூடான் வன்முறை 4,50,000 குழந்தைகளை வெளியேற்றியுள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சூடானில் நிகழும் தற்போதைய வன்முறைகள் காரணமாக 82,000 குழந்தைகள் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், 3,68,000 பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் ஆணையர் Filippo Grandi-வின் கருத்துப்படி, ஏப்ரல் 15 முதல், 1, 64,000-க்கும் மேற்பட்ட மக்கள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ச்சாட், எகிப்து, எத்தியோப்பியா, லிபியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், மேலும், IOM மதிப்பிட்டுள்ளபடி, மோதல் தொடங்கியதில் இருந்து சூடானில் ஏறத்தாழ 7,36,000 பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவன இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், சூடானில் நடக்கும் மனிதாபிமானமற்ற மோதல்கள் அந்நாட்டின் குழந்தைகளை பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளன என்றும், இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உறவினர் பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், மிகவும் ஆபத்தான சூழலில் உள்ள அவர்களுக்கு அனைத்துலகச் சமூகம் ஆதரவுக்கரம் நீட்டவேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
சூடானில், UNICEF அவசரகால நலக்கருவிகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்துகளை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கியதுடன், காயமடைந்தவர்களின் பராமரிப்பு மற்றும் அடிப்படை மற்றும் உயிர்காக்கும் நலப்பணிகளையும் அணுக உதவி வருகிறது.
மேலும் இடம்பெயர்ந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக அடிப்படை வசதிகள் கிடைக்க உறுதி செய்ய முயன்று வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்