மகிழ்வான குடும்பம் மகிழ்வான குடும்பம்  

வாரம் ஓர் அலசல் – உலக பெற்றோர் நாள்

இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட நாம் படைத்த அக்கடவுளை நம் கண்களால் காண இயலாது. அதனால் தான் காணுகின்ற கடவுளர்களாக பெற்றோர்களை நமக்குத் தந்துள்ளார் கடவுள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அம்மா என்னும் சொல்லை நம் வாழ்வின் முதன் மொழியாகவும் அப்பா என்னும் சொல்லை வாழ்வின் முதல் முகவரியாகவும் கொண்டவர்கள் நாம். இன்னாரின் பிள்ளை இத்தனாவது பிள்ளை என்பதில் ஆரம்பாகின்றன நாம் யார் என்பதற்கான இவ்வுலகின் அடையாளங்கள். இருகை தட்டினால் தான் ஓசை வரும் அதுபோல பெற்றோர்கள் இருவரும் இணைந்து இருந்தால் தான் பிள்ளைகளின் வாழ்வில் இன்பம் என்னும் ஒலி பிறக்கும். நாம் தேடிச்சென்றாலும் விலகிச்செல்லும் பிற மனித உறவுகள் மத்தியில் நாம் விலகிச்சென்றாலும் நம்மைத் தேடி வரும் ஒரே சொந்தம், உறவு பெற்றோர்கள் மட்டுமே. இத்தகைய பெற்றோர்களை சிறப்புசெய்யும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையானது உலக பெற்றோர்கள் நாளாக சிறப்பிக்கப்படுகின்றது. அதன்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூலை 23 உலக பெற்றோர்கள் நாள் சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் இன்றைய நம் வாரம் ஓர் அலசலில் அது பற்றிய கருத்துக்களைக் காண்போம்.

1980 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள்அவையானது குடும்பம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1989ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று ஏற்படுத்தப்பட்ட தீர்மானமானது 1994 ஆண்டை பன்னாட்டு குடும்ப ஆண்டாக அறிவித்தது. மேலும், 1993 இன் தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்பட வேண்டும் பெற்றோர்கள் மதித்து போற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியது. 1994 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்நாள் இப்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளிலும் பல்வேறு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1994ஆம் ஆண்டு அரசுத்தலைவர் பில் கிளிண்டன் பெற்றோர் தினத்தை சட்டமாக அறிமுகப்படுத்தினார் "குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரித்தல், மேம்படுத்துதல் மற்றும் ஆதரித்தல்" ஆகியவற்றுக்கான காங்கிரஸின் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தினம் என்று இரு வேறு தினக்கள் தனித்தனியாகக் கொண்டாடப்பட்டாலும், இருவருக்கும் சேர்த்து அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளை நினைவுகூருவது அவசியம் என்று உணர்ந்த கிளிண்டன் அவர்கள், முதல் பெற்றோர் தினத்தை  , 1995 ஜூலை 28அன்று அதிகாரப்பூர்வமாக அனுசரிக்க உத்தரவிட்டார்.

பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த பரிசு. நம் வாழ்க்கையில் பெற்றோர் பெற்றிருக்கும் இடத்தை யாராலும் பெறமுடியாது. அவர்கள் நமது உண்மையான நலம் விரும்பிகள். பெற்றோருக்கு மாற்றாக இவ்வுலகில் எதுவும் இல்லை, ஏனென்றால் நம்வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் வழியை வெளிச்சம் போட்டுக் காட்ட எல்லாவிதமான செயல்களையும் நமக்காகச் செய்பவர்கள் அவர்கள். சமுதாயத்தில் சாதனையாளர்களாக நாம் வாழ சிறப்பான வழியை நமக்குக் காட்டுபவர்கள். தன்னலமற்ற செயல்களை அர்ப்பண மனநிலையுடன் செய்து தங்கள் வாழ்நாளை நமக்காக தியாகம் செய்பவர்கள். இத்தகைய நல்ல உள்ளம் படைத்த அவர்களின் தியாகத்தை பாராட்டவும், மதிக்கவும் நம்மை வலியுறுத்தும் நாளே இந்த உலக பெற்றோர் நாளாகும்.    

இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட நாம் படைத்த அக்கடவுளை நம் கண்களால் காண இயலாது. அதனால் தான் காணுகின்ற கடவுளர்களாக பெற்றோரை நமக்குத் தந்துள்ளார் கடவுள். “தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று பாடியருளினார் ஒளவையார். அதாவது இந்த உலகத்தில் நம்மை பெற்ற அன்னை தந்தையை விட வணங்குவதற்கு உயர்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதை இப்பாடல் வழியாக வலியுறுத்துகின்றார் சங்கப்புலவர் ஔவையார். தாம் பெற்ற குழந்தைகளை நல்வழியிலே வளர்த்து ஆளாக்குவதற்காக தம்மையே அர்ப்பணிக்கும் பெற்றோர்களின் தியாகத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை. ஆகச்சிறந்த அன்பை தரும் அன்னையினையும் மிகச்சிறந்த ஆசிரியனாக தந்தையினையும் பெற்று கொண்ட நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே. தங்களது வாழ்வில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை தமது பிள்ளைகள் அனுபவித்து விடக்கூடாது என்று எண்ணுகின்றவர்கள் தான் பெற்றோர்.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே பெற்றோர்களையும் பெரியவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், மாதா பிதா குரு தெய்வம் என்று கூறும் அனைத்து நூல்களிலும் பெற்றோரின் மாண்பும் பெருமையும் வலியுறுத்தப்படுகின்றன. வீட்டிற்கு பெரியோர் வந்தால் வாசல் வரை சென்று வரவேற்பது வழியனுப்புவது முதல் அவர்கள் எதிரில் இருந்தால் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை அனைத்தும் அனுபவ பாடமாகக் கற்றுக்கொடுப்படும். பெரியவர்களின் காலை தொட்டு வணங்குவது, கிறிஸ்தவம் முஸ்லீம் என மதங்களுக்கு ஏற்றபடி விழா நாட்களில் அவர்களின் ஆசீரை பெறுவது என பல்வேறு செயல்கள் பெற்றோர் மற்றும் பெரியோர்களை மதிப்பதை எடுத்துரைக்கின்றன.

இந்த உலகத்தில் ஒவ்வொரு மனித உயிரும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது பெற்றோர்கள் தான். எவன் ஒருவன் தனது தாய் தந்தையர்களுக்கு கீழ்பணிந்து அவர்களது வழிகாட்டுதலில் வாழ்கின்றானோ அவன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் ஏன் என்றால் பெற்றோர்கள் தான் நமக்கு இந்த உடலையும் இந்த உலக வாழ்க்கையினையும் கொடுத்தவர்கள். நம்மை பத்து திங்கள் தன் கருவில் சுமந்து பெற்றெடுத்த தாய்  நம்மை பாலூட்டி சீராட்டி வளர்க்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கின்றார்.  நம்மையும் நமக்கான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கென நமது தந்தை வியர்வை சிந்தி கடினமான உழைத்திருக்கின்றார். தமது குழந்தைகளுக்கு அன்பையும் கல்வியினையும் ஊட்டி அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்று எண்ணுகின்ற சுயநலம் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமானால் அது பெற்றோராக தான் இருக்க முடியும்.

சமூக வாழ்வின் மையம் குடும்பம் மட்டுமே. குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் குடும்பம் முதன்மையானப் பொறுப்பைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்கள் நல்ல குடும்பச் சூழலில், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் நிறைந்த சூழலில் வளர வேண்டியது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி என இருவருமே வேலைப்பளு காரணமாக குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. பெற்றோர்களின் அன்பையும் அரவணைப்பையும் நம்   வாழ்வனைத்தும் பெற்று கொள்வது நமது பாக்கியம். பெற்றொருக்கு  நாம் கைம்மாறு செய்வதாக இருந்தால் அவர்களை பெருமைப்படுத்தும் படியாக ஒரு நல்ல மனிதனாக இந்த சமூகத்தில் வாழ்வது மட்டுமன்றி அவர்களது இறுதி காலம் வரை அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். இதைவிட உயர்ந்த செயல் இந்த உலகில் எதுவும் இருந்து விட முடியாது என்பதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் இந்த உலக பெற்றோர் நாளின் பின்னணி ஒன்றுதான், அது பெற்றோருக்கு பாராட்டு, அன்பு, அக்கறை, மரியாதை போன்றவற்றை வழங்குவதேயாகும்.

இந்நாளில் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர்களைப் பற்றி சிந்திப்போம். நம் பெற்றோர்கள் நமக்கு வழங்கிய தியாகங்கள், வளர்ப்பு, கவனிப்பு, உணர்ச்சி வலிமை போன்றவற்றிற்காக அவர்களுக்கு நன்றி கூறுவோம். இன்றைய காலத்தில் பலரும் தம்மை பெற்று வளர்த்த பெற்றோர்களை மதிக்காமல் அவர்களை முதியோர் இல்லங்களில் விடுகின்ற கொடுமையினைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். நமது பெற்றோரை மதித்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு  நம் அனைவருக்கும் உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என வணங்கத் தகுதியானவர்களின் வரிசையில் சான்றோர்கள் முன்னிலையில் வைப்பது தாய் – தந்தை எனும் பெற்றோரையே. இதிலிருந்து நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோர்கள் எந்த அளவு முக்கியமானவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது. தான் அனுபவித்த துன்ப நிலைகளை தன்னுடைய குழந்தைகள் அனுபவிக்க கூடாது என குழந்தைகளுக்காகவே தங்களுடைய வாழ்வை முழுவதுமாக அர்ப்பணம் செய்யும் தியாகிகள் பெற்றோர். இவர்களை விட உலகில் தலை சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை.

இந்த உலகில் தாய் தந்தையினை இழந்து ஆதரவின்றி அனாதையாக பரிதவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் கண்ணீரிலும் நாம் பெற்றோரின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தையை எவ்வளவு சொகுசாக வளர்த்தாலும் கூட பெற்றோரின் அரவணைப்பை போல் சிறந்த இடம் எங்கும் கிடைப்பதில்லை.எனவே தாய் தந்தையினை அருகில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பெற்றோர்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த உலகில் உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெற்றோரை மதித்து கௌரவம் அளித்தவர்களே. சிறுவர்களாக நாம் இருக்கையில் கண் இமை போல் காத்த  நம் பெற்றோரின் முதிர்வயதில் அவர்களை கண்கலங்காமல் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் அளிக்கும் கௌரவமாகும்.

இன்று முதியோர் இல்லங்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவிக் கிடக்கின்றன. தங்களை வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்களை முதுமையின் காரணமாக தங்களுடைய பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவல நிலை தற்காலங்களில் அதிகமாகவே இடம் பெறுகின்றது. வெயில், மழை, துன்பம், இன்பம் என  பார்த்து பார்த்து வளர்த்த தன்னுடைய குழந்தை வளர்ந்து ஆளாகியவுடன், உங்களுக்கு பொருத்தமான இடம் முதியோர் இல்லமே என கூறும் நிலைமையையே தற்கால பெற்றோர் அனுபவித்து வருகின்றனர்.

ஆயிரம் வார்த்தைகள் அன்பு செய்பவர்களுக்காக எழுதலாம் ஆனால் நம்மை இவ்வுலக புத்தகத்தில் எழுதியவர்களைப் பற்றி எழுத தமிழின் 247 எழுத்துக்களும் போதாது. தன்னலம் இல்லாதது தந்தையின் அன்பு, ஈடு இணை இல்லாதது அன்னையின் பாசம். உணவு உண்ண மறந்து உறக்கம் தன்னை இழந்து, உதிரத்தை வாட்டி வதைத்து நமக்காக உயிர் வாழும் நம் பெற்றோர்களை பாதுகாப்போம். முதிர்வயதில் அவர்கள் விரும்புவது கனிவான பார்வையையும் அவர்கள் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும் உள்ளத்தையும் தான். ஆடம்பரமாக அனைத்து வசதிகளுடனும் நாம்வாழ தங்களது சுக துக்கங்களை தியாகம் செய்த பெற்றோரைப் போற்றுவோம். பெற்றோரின் அருமையை பிள்ளைகளாக இருக்கும் போதே உணரத்தொடங்குவோம். இல்லையெனில் நாம் பெற்றோராக மாறும் காலத்தில், காலம் நமக்கு அதனை கசப்பான அனுபவ பாடமாக உணர்த்திவிடும். பெற்றோரைப் பாதுகாப்போம் நிறைவான வாழ்க்கை வாழ்வோம் அனைவருக்கும் இனிய உலக பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2023, 12:46