ஆப்கானில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளை, அந்நாட்டில் கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்று கூறியுள்ளது Save the Children என்ற அனைத்துலக அமைப்பு.
மனிதாபிமான மற்றும் நீண்டகால வளர்ச்சி உதவிகளுக்காக அனைத்துலகச் சமூகத்தின் அவசர நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்துள்ள இவ்வமைப்பு, நாட்டிலுள்ள பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் மனிதாபிமானப் பணிகளுக்காக நடந்துவரும் மற்றும் தற்போதுள்ள நிதியை முடக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ வேண்டாம் என்று உதவிபுரியும் அனைத்து அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட மொத்த குழந்தைகளில் 76.1 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு சாப்பிட்டதைக் காட்டிலும் இவ்வாண்டு அதன் அளவு குறைந்துள்ளது எனக் கூறியதாகவும், நாட்டில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி விளைபயிர்களைப் பாதித்துள்ளது என்றும், கால்நடைகள் இறப்பு மற்றும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கிறது.
காலநிலை நெருக்கடியால் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களில் ஏற்படும் கொடிய தாக்கத்திற்கு உலகின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்றாகும். இந்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வறட்சியை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்