டிப்தீரீயா தொற்றுநோய் ஆபத்தில் நைஜீரிய சிறார்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நைஜீரியாவில் சிறாரை அதிகமாகப் பாதிக்கும் டிப்தீரியா தொற்றுநோய்க்கான எச்சரிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஏறக்குறைய 22 இலட்சம் சிறாருக்குத் தடுப்பூசி இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு
செப்டம்பர் 28 வியாழன் அன்று யுனிசெஃப் வெளியிட்ட தகவல்களின்படி, டிப்தீரியா என்னும் பாக்டீரியா தொற்றுநோயினால் இதுவரை 11,500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 7,000 பேருக்கு நோய் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான சிறார் உட்பட 453 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றது.
4 மற்றும் 15 வயதுக்குட்பட்ட சிறார், முக்கியமான தடுப்பூசியின் அளவைப் பெறவில்லை என்று கூறியுள்ள அவ்வமைப்பு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் நைஜீரிய அரசாங்கத்திற்கு யுனிசெஃப் தன் அவசரகால ஆதரவாகத் தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அரசு சார்பில், கானோ, பௌச்சி, போர்னோ, யோபே, கட்சினா, கடுனா மற்றும் ஜிகாவா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 93 இலட்சம் டிப்தீரியா தடுப்பூசிகளை யுனிசெஃப் விநியோகித்துள்ளது. இவற்றில், 40 இலட்சம் தடுப்பூசிகள் தொற்றுநோயின் மையமான கானோவில் விநியோகிக்கப்பட்டன.
நைஜீரியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, பன்னாட்டு சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் UNICEF நைஜீரியா அழைப்பு விடுத்துள்ளது. வழக்கமான நோய்த்தடுப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ள யுனிசெஃப் எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்களைத் தவிர்க்க சமூகம் மற்றும் சுகாதார அமைப்புகள் துடிப்புடன் செயலாற்றவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்