பாதிக்கப்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடத்தில்  (AFP or licensors)

காசா குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை

உடனடியான போர்நிறுத்தம், மனிதாபிமான அணுகல் ஆகியவை காசாவில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் தேவையான உதவிகளைப் பெறுவதற்கு முதன்மையான முன்னுரிமைகள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல்களினால் மக்கள் இடம்பெயர்வு, குழந்தைகள் பாதிப்பு என துன்புறும் குடும்பங்களின் எண்ணிக்கை மிக அதிகரித்து வருகின்றது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான முதன்மை உதவிகளை வழங்க உடனடி போர் இடைநிறுத்தம் தேவை என்றும் கூறியுள்ளார் யுனிசெஃப் இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்.

அக்டோபர் 14 சனிக்கிழமை யுனிசெஃப் வெளியிட்ட தகவல்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள யுனிசெஃப் இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் அவர்கள், காசாவில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள், உணவு, நீர், மின்சாரம், மருந்து, மருத்துவமனை வசதி என எதுவுமின்றி துன்புறுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

காசா பகுதியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் அமைப்பு, குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சேவைகளை அளவிடுதல், மற்றும் நிலைநிறுத்துதலுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான அணுகலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பெரிய அளவிலான தாக்குதல்கள் ஏற்படுவதற்கு முன்னதாக அக்டோபர் 14, சனிக்கிழமை ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டனர் என்றும், இன்னும் ஏறக்குறைய 11 இலட்சம் மக்கள், தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து வெளியேற எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

பேரழிவுகரமான நிலைமையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க இடம் இல்லை என்றும், உடனடியான போர்நிறுத்தம், மனிதாபிமான அணுகல் ஆகியவை காஸாவில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் தேவையான உதவிகளைப் பெறுவதற்கு முதன்மையான முன்னுரிமைகள் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ரஸ்ஸல்.

முதன்மை உதவிகள் தேவைப்படும் குழந்தைகள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் தடையற்ற அணுகலை உறுதிசெய்ய முயற்சித்து வருவதாகவும், காசாவின் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஆதரவு தேவை, எனவே ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார் ரஸ்ஸல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2023, 11:56