குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட தன் குழந்தையைத் தேற்றும் தாய் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட தன் குழந்தையைத் தேற்றும் தாய்   (AFP or licensors)

காசாவில் கொல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறியுள்ளதுடன், மற்ற அனைவருக்கும் அது ஒரு நரகமாகக் காட்சியளிக்கிறது : James Elder

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோதலில் சிக்கியுள்ள காசாவில் 3,450-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் தனது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.

அக்டோபர் 31, செவ்வாயன்று, ஜெனிவாவில் உள்ள Palais des Nations  என்னுமிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யுனிசெஃப்பின் செய்தித் தொடர்பாளர் James Elder வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த Elder அவர்கள், காசா பகுதியில் மோதல் தொடங்கிய நாளிலிருந்தே உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம், உதவிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என யுனிசெப் நிறுவனம் வலியுறுத்து வருகின்றது என்றும், பலரைப் போலவே, குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துமாறு நாங்களும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்றும் உரைத்துள்ளார்.

காசாவில் கொல்லப்பட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரம் என்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துகொண்டே போவது தங்களுக்குப் பேரச்சத்தைத் தருவதாகவும், தற்போது வரை 3,450-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக நாங்கள் அறிய வருகின்றோம் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள Elder அவர்கள், ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை திகைப்பூட்டும் வகையில் அதிகரிப்பது எங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றது என்றும்  கவலை தெரிவித்துள்ளார் 

எனவே, தாலியா மற்றும் ஜைன் மற்றும் காசாவில் உள்ள மற்ற 11 இலட்சக் குழந்தைகள் சார்பாக நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்வதெல்லாம் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை என்பதுதான் என்று சுட்டிக்காட்டியுள்ள Elder, தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையின்றி பாதுகாப்பாகக் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்றும், காசாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளும் திறக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் இல்லை என்றால், தண்ணீர் இல்லை, மருந்து இல்லை என்றும், கடத்தப்பட்ட குழந்தைகள் விடுவிக்கப்படவில்லை என்றால், அப்பாவி குழந்தைகளைப் பாதிக்கும் இன்னும் பெரிய பயங்கரங்களை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்றும் அர்த்தம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் Elder

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2023, 15:09