குழந்தைகளின் நலன் குறித்த புதிய காணொளி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மோதல்கள் மற்றும் வன்முறைகளின் அதிகரிப்பு முதல் காலநிலை மாற்றத்தின் அழிவுகரமான விளைவுகள் வரை அவசரநிலைகள், போர்கள், உணவு மற்றும் காலநிலை நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு 2023-ஆம் ஆண்டு, ஒரு கடினமான ஆண்டாகவே இருந்தது என்றும், உலகளவில் அதிகமான குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
Children's thoughts on peace அதாவது, "அமைதி பற்றிய குழந்தைகளின் எண்ணங்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அவ்வமைப்பு, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் 46 கோடியே 80 இலட்சம் மக்கள் மோதல் பகுதிகளில் வாழ்பவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மோதல் பகுதிகளில் வாழும் குழந்தைகள் காயமடைதல், கொல்லப்படுதல், கடத்தப்படுதல், முறைகேடுகள் போன்றவற்றுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ள இவ்வமைப்பு, 2022-ஆம் ஆண்டில் (அண்மைய தரவு) ஆறில் ஒரு குழந்தை போர் மண்டலத்தில் வாழ்ந்தது என்றும், 2005-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுப்புகள் தொடங்கியதிலிருந்து இது மிக உயர்ந்த நிலையாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்கக் கண்டம் போர்ச் சூழல்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்ட பகுதியாகும் என்றும், அதேவேளை, மத்திய கிழக்கு, காசாவில் நடந்து வரும் மோதலுக்கு முன்பே, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.
உலகின் மிகவும் இளம் குழந்தைகளின் அமைதிக்கான அழைப்புக்குக் குரல் கொடுக்கவும், புதிய ஆண்டை முன்னிட்டு நம்பிக்கை செய்தியை அனுப்பவும், 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் இந்த அனைத்துலக அமைப்பு, ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதாவது, TikTok -இல் வெளியிடப்படாத மூன்று இசைத் தடங்களை மூன்று படைப்பாளர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள அமைதிக்கான குழந்தைகளின் அழைப்புகளுக்குக் குரல் கொடுக்கும் வண்ணம் உருவாகியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்