புலம்பெயரும் சிறாரை பாதுகாக்கும் யுனிசெப்பின் திட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அகதிகளாக புலம்பெயரும் குழந்தைகள் மற்றும் இளையோர் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கத்தில் நீண்டகாலத் திட்டங்களை உள்ளடக்கிய, ‘உரிமைகளின் எல்லைக்கோடு’ என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு.
டிசம்பர் 18ஆம் தேதி உலக புலம்பெயர்ந்தோர் நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ள ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பான யுனிசெப், இத்தாலிக்குள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் நுழையும் அகதிகளுக்கு உதவி அமைப்புக்களுடன் இணைந்து எடுத்து நடத்திவரும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய சமுதாய அவையின் உதவியுடன் இந்த புலம்பெயர்வோர்க்கான பாதுகாப்புத் திட்டங்களை பல்வேறு உதவி அமைப்புக்களுடன் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது யுனிசெப் அமைப்பு.
யுனிசெப்பும் அதன் தோழமை அமைப்புக்களும், இவ்வாண்டில் மட்டும் இத்தாலியின் எல்லப்புறங்களில் 6000 சிறார் உட்பட 7000 பேரை நேரடியாகச் சென்றுச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து டிசம்பர் 15ஆம் தேதிவரை 1இலட்சத்து 53 ஆயிரம் பேர் இத்தாலிக்குள் கடல் வழியாக நுழைந்துள்ளனர், இதில் 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரியவர்களின் துணையின்றி நாட்டிற்குள் நுழைந்த சிறார் ஆவர்.
பால்கன் பாதை வழியாக நாட்டின் வடபகுதிக்குள் நுழைந்த புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளிவிவரங்கள் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சமுதாய அவையின் புலம்பெயர்வோர் மற்றும் உள்விவகார செயலகத்தின் உதவியுடன், Save the Children போன்ற பல்வேறு உதவி அமைப்புக்களின் துணையோடு இத்தாலியில் புலம்பெயர்வோர்க்கான பணிகளைச் சிறப்பாக நடத்திவருகிறது யுனிசெப் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்