மியான்மார் நாட்டு ரொஹிங்கியா அகதிகள் மியான்மார் நாட்டு ரொஹிங்கியா அகதிகள்  (AFP or licensors)

மியான்மாரில் போதிய சத்துணவின்றி 60 இலட்சம் குழந்தைகள்

மியான்மாரில் உள்நாட்டுப் போரால், உணவு பாதுகாப்பின்மை, பொருளாதார முடக்கம், பேரழிவு போன்றவை இடம்பெற்று, 20 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மியான்மார் நாட்டில் அரசுத் துருப்புக்களுக்கும் புரட்சிக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், உணவு பாதுகாப்பின்மை, பொருளாதார முடக்கம், பேரழிவு போன்றவை இடம்பெற்று, 20 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்வதாக 2023ஆம் ஆண்டு குறித்து ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட அறிக்கை எடுத்துரைக்கிறது.

2021ஆம் ஆண்டில் மியான்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றதிலிருந்து மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, 60 இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்றி வாடுவதாகவும், மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 இலட்சத்தை எட்டியுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 10 இலட்சம் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள், கல்வி, போதிய உணவு, தங்குமிடங்கள் போன்றவை பெருமளவில் குறைவுபடுவதாகக் கூறும் இவ்வறிக்கை, மனிதர்களை வியாபாரப் பொருளாகக் கடத்தும் கும்பல்களாலும், போரில் ஈடுபடுவோராலும் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டில் மியான்மார் நாட்டில் மனிதாபிமான நெருக்கடி மேலும் அதிகரிக்கவுள்ளதாக அச்சத்தை வெளியிடும் ஐ.நா. நிறுவனம், 53 இலட்சம் மக்களுக்கென 40 இலட்சம் டாலர் செலவுடன் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2024, 15:59