உக்ரைனில் 340,000 அளவுகள் வாய்வழி போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யுனிசெஃப் நிறுவனம், USAID எனப்படும் அனைத்துலக வளர்ச்சிக்கான அமெரிக்காவின் தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன், உக்ரைனுக்கு 3,40,000 அளவு வாய்வழி போலியோ தடுப்பூசியை (OPV) வழங்கியுள்ளது என்றும், அந்நாட்டின் தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவளித்து, உயிருக்கு ஆபத்தான நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்துள்ளது என்றும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது.
இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள உக்ரைன் நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனத்தின் துணைப் பிரதிநிதி Veera Mendonca அவர்கள், இந்த முக்கியமான தருணத்தில் நோய்த்தொற்றிலிருந்து உக்ரைன் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைனில் உள்ள குழந்தைகளின் உடல்நலம், எல்லா இடங்களிலும் உள்ளதைப் போலவே, மிகவும் முக்கியமானது என்றும், பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ள Mendonca அவர்கள், போலியோ தடுப்பூசி மட்டுமன்றி, மற்ற அனைத்து வகையான தடுப்பூசிகளையும் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023-ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு வயதினரிடையே போலியோ தடுப்பூசி செலுத்தும் அளவு 80 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்றும், இருப்பினும், உலக நலத்துறையின் பரிந்துரைகளின்படி, நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளின் அளவு 95 விழுக்காடாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அந்நாட்டிற்கான துணை அமைச்சர் மற்றும் தலைமை மாநில நல மருத்துவர் Ihor Kuzin.
2023-ஆம் ஆண்டில் மட்டும், யுனிசெஃப் நிறுவனம் 7,83,000 அளவு வாய்வழி போலியோ தடுப்பூசியையும் ஏறத்தாழ 4,24,000 அளவு வீரியம் குறைந்த (inactivated) போலியோ தடுப்பூசியையும் (IPV) உக்ரேனிய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கியது. மேலும் அதன் துணைவர்களுடன் (Partners) இணைந்து, உக்ரைனின் தேசியத் தடுப்பூசி திட்டத்திற்கு UNICEF தொடர்ந்து ஆதரவளித்து, குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதையும், போலியோ மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதையும் உறுதிசெய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்