மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு புதிய அர்ப்பணங்கள் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இன்றைய உலகம் நாளுக்கு நாள் பாதுகாப்பற்றதாக மாறிவரும் நிலையில், மனித உரிமைகளில் தங்கள் அடிப்படையைக் கொண்ட அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அரசுகள் உழைக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குட்டாரெஸ்.
ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தினை துவக்கிவைத்து உரையாற்றிய குட்டாரெஸ் அவர்கள், இன்றைய உலகில் சட்டத்தின் ஆட்சியும், போர்க்காலச் சட்டங்களும் மதிக்கப்படுவதில்லை என்ற கவலையை வெளியிட்டார்.
உக்ரைன், சூடான், மியான்மார், காங்கோ ஜனநாயக குடியரசு, காசா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் மோதல்களின்போது, சர்வதேச சட்டம், ஜெனிவா ஒப்பந்தங்கள், ஐ.நா.வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை ஆவணங்கள் என எதுவுமே பின்பற்றப்படுவதில்லை என்ற கவலையை வெளியிட்ட பொதுச் செயலர், உக்ரைனை இரஷ்யா ஆக்ரமித்தது, காசா மீதான இஸ்ராயேலின் தாக்குதல்கள் போன்றவைகளில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஒத்திசைவு காணப்படாமை குறித்தும் எடுத்துரைத்தார்.
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டுவருவது குறித்து எவரும் மௌனம் காக்கமுடியாது என எடுத்துரைத்த ஐ.நா. பொதுச்செயலர் குட்டாரெஸ் அவர்கள், தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் காசாவில் உடனடி போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் எனவும், அனைத்து பிணையக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு புதிய அர்ப்பணங்கள் தேவைப்படுகிறன என்ற அழைப்பையும் விடுத்தார் பொதுச் செயலர் குட்டாரெஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்