உடைமைகள், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் பறித்துள்ள மோதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மோதல்கள், மக்களின் பாதுகாப்பு, உடைமைகள், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் பறித்துள்ளன என்றும், போரினால் பாதிக்கப்பட்ட சூடானில், இரண்டு பேரில் ஒருவருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸின் உதவி அமைப்பான சூடானின் CAFOD அமைப்பு.
சூடானில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுவரும் மோதலினால் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 1கோடிக்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது CAFOD சூடான் அமைப்பு.
சூடானின் CAFOD அமைப்பு மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களுக்கு அடிப்படை பொருட்களை வழங்க முயற்சிக்கும் மனிதாபிமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
சூடானியர்களை நாங்கள் மறக்கவில்லை, பாதுகாப்பு இல்லாமை, அதிகாரத்துவ தடைகள், சிக்கலான தகவல்தொடர்பின்மை போன்றவற்றில் சவால்கள் பல இருந்தபோதிலும், CAFOD உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து அடிப்படைத்தேவைகளை மக்களுக்கு வழங்கிவருகின்றது என்று கூறியுள்ளார் சூடானின் CAFOD அமைப்பின் திட்ட மேம்பாடு மற்றும் நிதி மேலாளர் சமிலா டேனிஷ்.
அதிகரித்து வரும் மோதல்கள், உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன என்றும், நீர் நிலைகளில் ஏற்பட்ட பாதிப்புக்களினால் காலரா, தட்டம்மை, மலேரியா போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகளவில் பரவி வருகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் டேனிஷ்.
உணவு, தண்ணீர், தங்குமிடம், எரிபொருள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை அவசரத்தேவைகளாக இருக்கின்றன என்றும், ஐக்கிய நாடுகள் அவை, மனிதாபிமான செயற்பாட்டாளர்களின் முயற்சிகள் என பல இருந்தபோதிலும், தங்கள் வீடுகளை இழந்த புலம்பெயர்ந்தோர், வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்