வாரம் ஓர் அலசல் – இலாப நோக்கமற்ற அரசு சாரா அமைப்புகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஓர் அரசால் மட்டும் நாட்டுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிவிட முடியுமா? அதிலும் குறிப்பாக ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் இது இயலக்கூடிய காரியமா? இந்தியாவையே ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். வளரும் பொருளாதாரமாக இருக்கின்றபோதிலும், இந்தியாவில், விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் போதுமானதாக இருப்பதில்லை; அவர்களுக்கு மேலும் கூடுதலான ஆதரவு தேவைப்படுகிறது. இங்குதான் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது.
இந்த அரசு சாரா அமைப்புக்களின் உலக நாளைத்தான் இம்மாதம் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கிறோம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பிப்ரவரி 27 உலக என்ஜிஓ (World NGO DAY) தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக அனைத்து அரசு சாரா மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், ஆண்டு முழுவதும் சமூகத்திற்குப் பங்களிக்கும் அவர்களுக்குப் பின்னால் உள்ள மக்களையும் அங்கீகரித்து, கொண்டாடி, கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அனைத்துலக தினம்தான் பிப்ரவரி 27. அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் செயல்படுவதை அங்கீகரித்து, அது குறித்த விழிப்புணர்வை ஊட்டும் நாள் இது.
இந்த ஆண்டிற்கான, அதாவது 2024ஆம் ஆண்டிற்கான தலைப்பாக, “நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்: நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு" என்பது எடுக்கப்பட்டுள்ளது. இவ்வுலகம் இன்று எதிர்நோக்கிவரும் சவால்களை வெற்றிகொள்வதிலும் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையில் உழைப்பதிலும் அரசு சாரா அமைப்புக்களின் பங்களிப்பை கௌரவிப்பதாக இந்த தலைப்பு உள்ளது.
இப்போது நாம் கொஞ்சம் இந்த அரசு சாரா அமைப்புக்கள் எந்தெந்த துறைகளில் அதிகக் கவனம் செலுத்தி தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன என நோக்குவோமா? மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிச் செய்தல், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளுக்கு நிதியுதவுவி வழங்குதல், நல்ல சமூக மாற்றங்களுக்கு வித்திடுதல், சுயவிருப்பப் பணியாளர்களை ஊக்குவித்தல், சமுதாய முன்னேற்றப் பணிகளில் அவர்களையும் இணைத்துக் கொள்ளல், உலகின் சவால்களை எதிர்கொள்ள மக்களைத் தயாரித்தல், அவர்களையும் ஈடுபடுத்துதல் போன்றவைகளில் அதிகக் கவனம் செலுத்தி செயலாற்றி வருகின்றன அரசு சாரா அமைப்புக்கள். ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27ஆம் தேதி நாம் சிறப்பிப்பது வெறும் கொண்டாட்டம் அல்ல. இது நம் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஓர் அழைப்பு. மற்றும், அரசு சாரா அமைப்புக்கள் இப்பூமியில் ஏற்படுத்திவரும் தாக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் நாள். அது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் வாழும் ஒரு வருங்காலத்தை உருவாக்குவதற்கான நம் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நடவடிக்கையையும் ஊக்குவிக்கும் நாள்.
இந்தியாவின் வளர்ச்சி
இவ்வாண்டு இந்திய அரசின் வரவு செலவு நிதி சமர்ப்பிப்புக் கூட்டத்தின் முதல் நாள், அதாவது ஜனவரி 31ஆம் தேதி மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இப்போது பார்ப்போம்.
-இரண்டு கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.
-குழந்தைப் பருவத்திலிருந்தே, 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தை நாம் கேட்டு வருகிறோம். இப்போது, நமது வாழ்வில் முதன்முறையாக, பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
-நித்தி ஆயோக்கின் தகவல்படி, 10 ஆண்டுகளில், நாட்டு மக்களில் ஏறக்குறைய 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
-4 கோடியே 10 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளன. இதற்காக ஏறக்குறைய 6 இலட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
-முதன்முறையாக, அரசு குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுக்களுக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவில் பிரதமரின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
-இந்திய இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாட்டுக்காக அரசு தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காக, 14,000-க்கும் மேற்பட்ட 'பிரதமரின் ஸ்ரீ வித்யாலயா'க்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இவையெல்லாம் இந்திய குடியரசுத் தலைவரின் நீண்ட உரையிலிருந்து நாம் முன்வைக்கும் ஒரு சில தகவல்கள். இப்போது சொல்லுங்கள். இதையெல்லாம் அரசு மட்டும் தனித்து நின்று சாதித்திருக்க முடியுமா? தனியார் அமைப்புக்கள், தனியார் கல்வி நிலையங்கள், தன்னார்வக் குழுக்கள், அரசு சாரா அமைப்புக்கள் போன்றவைகளின் பங்களிப்பு இங்கு இல்லையா? அல்லது, இது, அரசின் சாதனைகள், தனியார் சாதனைகளுக்கென்று ஒரு தனிக் கணக்கு உள்ளது என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா? நாட்டின் முன்னேற்றத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கிறோம் என்பதுதான் உண்மை. 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றால் அதில் அரசு சாரா அமைப்புக்களின் பங்களிப்பு உள்ளதா, இல்லையா?.
வரலாறு
அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு என்று பார்த்தோமானால், அது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்தே தொடங்குகின்றது எனக் கூறலாம். அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியப் பங்காற்றின இவைகள். NGOக்கள் ஒரு நவீனகால நிகழ்வாக இருப்பினும் இவைகளின் தொடக்கப் புள்ளியான இளைஞர்களின் கிறித்துவ கழகங்களின் (Young Men’s Christian Association - YMCA) உலகக் கூட்டணி 1855ல் நிறுவப்பட்டது, மேலும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கான அனைத்துலகக் குழு 1863ல் உருவானது.
உலக ஆயுதக் களைவு முயற்சிக் காலத்தில் அரசுசாரா அமைப்புகளின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனக் கூறலாம். எனினும் அரசு சாரா அமைப்பு என்னும் பெயர் 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் வெளியே பரவலாக்கப்பட்டது. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக தன்னார்வக் குழுக்களின் அவை நிறுவப்பட்டது. இதனுடன் ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.
காலனி ஆதிக்கக் காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும், வேலைவாய்ப்பு, நலவாழ்வு, சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் முக்கியப் பணிகளாக இருந்தன. பின்னர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், மற்றும் தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
தன்னார்வக் குழுக்கள் நாடு முழுவதும் கிராமங்களில் பல இலட்சக்கணக்கான சுய உதவிக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், கூட்டுறவு குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றன. சில கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் இருக்கின்றன. சுயசார்பு பெற்றுத் தருவதை இவைகள் தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
உலக அரசு சாரா அமைப்பு தினம்
உலக அரசு சாரா அமைப்பு தினம் எப்போது துவக்கப்பட்டது என்று பார்த்தோமானால், இதனை 2009ஆம் ஆண்டு துவக்கியவர் Marcis Liors Skadmanis என்பவர். லாத்வியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்த தொழிலதிபாரான இவர் தன் 25ஆம் வயதில் அரசு சாரா அமைப்புக்கள் தினத்தை உருவாக்கினார். அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து 2010ஆம் ஆண்டே பால்டிக் பகுதியின் 12 நாடுகள் இதனை சிறப்பிக்கத் துவங்கின. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் நிறுவனம், மற்றும் ஏனைய உலக நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, முதல் உலக அரசு சாரா அமைப்புக்களின் தினம் சிறப்பிக்கப்பட்டது. இன்று 89க்கும் மேற்பட்ட நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் இதே நாளில் இதனை சிறப்பித்து வருகின்றன. உலகம் முழுவதும் இன்று இயங்கிவரும் அரசு சாரா அமைப்புக்களைப் பார்த்தோமானால், 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் 54,000க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் உள்ளன. குழந்தைகளின் நலவாழ்வுக்காக, மக்கள் உரிமைகளுக்காக, வறுமை ஒழிப்புக்காக, அகதிகள் பாதுகாப்பிற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக என மனிதாபிமானப் பணிகளை ஆற்றும் இவைகளுள் பெரியன அல்லது பிரபலமானவை என்று பத்தைக் குறிப்பிடவேண்டுமானால், Save the Children, ஆக்ஸ்பாம், எல்லைகளற்ற மருத்துவரகள் என்ற Doctors without Borders, பங்களாதேசை தலைமையிடமாகக் கொண்ட BRAC, World Vision, International Rescue Committee, Catholic Relief Services, Danish Refugee Council, CARE International, அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.
இந்த அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று, நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, கல்வியறிவுடையோரிடையே சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ஆய்வுகளையும் பயிற்சி கருத்தரங்குகளையும் நடத்துவது.
இத்தகைய அரசு சாரா, அதேவேளை இலாப நோக்கற்ற அமைப்புக்கள், அண்மை ஆண்டுகளில், வெற்றிகரமாக புதிய சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களை ஊக்குவித்தும், பெண்களின் உரிமைகளை பெரிதும் வலுப்படுத்தியும், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை வென்றும், நிலச் சுரங்கங்களைத் தடை செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்தும், ஏழை நாடுகளின் கடன் சுமை குறைக்கப்படுவதற்கு போராடியும், நியாயமான பொருளாதாரக் கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்தும், அவைகளில் வெற்றி கண்டும் வருகின்றன. இத்தகைய அமைப்புக்களுக்கு ஆதரவளிப்பது, ஊக்கமளிப்பது, மனிதர்கள் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்