காசா மோதல்களால் ஏமனிலும் பாதிப்புக்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
காசாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் செங்கடல் பகுதியில் பெரும் பதட்ட நிலைகளை உருவாக்கியுள்ளதாகவும், இதன் விளைவுகளால் ஏமன் நாடு மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மக்கள் கடத்திச் செல்லப்படல் அதிகரிப்பு, பசிச் சாவுகள், சித்ரவதைகள், தடுப்புக்காவல் என மக்களின் துன்பங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக உரைத்த அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான சமூகத் தொடர்பு அமைப்பின் நிர்வாகி Rania Awn அவர்கள், ஹவ்தி இடங்களின் மீது அமெரிக்க ஐக்கிய நாடும் இங்கிலாந்தும் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் துன்பங்கள் மேலும் அதிகரித்துள்ளன என கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலான மோதல்களால் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் ஏமன் நாடு இன்னுமொரு போரை தாங்காது என்ற அவர், காசா பகுதி மோதல்கள் ஏமனிலும் தன் பாதிப்புக்களைக் கொண்டுள்ளன என கவலையை வெளியிட்டார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், மக்கள் பசியால் வாடிவருவதாகவும் உரைத்த Rania Awn, ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், நம்பிக்கையின் ஒளிக்கதிர் அவ்வப்போது தெரிவதுபோல் தோன்றினாலும் தொடர்ந்து இருளிலேயே வாழவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் உரைத்தார்.
2014ஆம் ஆண்டு ஏமனில் உள்நாட்டு மோதல்கள் துவங்கியதிலிருந்து 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர், 45 இலட்சம் மக்கள் குடிபெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர்.
இது தவிர, 2015ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவின் தலைமையில் ஏமனில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்