உக்ரைனுக்கு 30 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது யுனிசெஃப்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2023 மற்றும் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், யுனிசெஃப் நிறுவனம் ஏறக்குறைய 30 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்றும், தடுப்பூசிக்காக ஏறத்தாழ 62 இலட்சம் சிரிஞ்ச்களையும் வழங்கியுள்ளதாக அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் 2023- ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை உக்ரைனின் 23 மாநிலங்களில் பயனுள்ள தடுப்பூசி சேமிப்பை உறுதி செய்வதற்காக ஏறத்தாழ 1,400 பயனுள்ள குளிர்சாதனப் பெட்டிகளையும் யுனிசெஃப் நிறுவனம் வழங்கியுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உக்ரைன் நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனத்தின் பிரதிநிதி Munir Mammadzade அவர்கள், இவ்விதத்தில் தரமான முறையில் குளிர்சாதன பெட்டிகளைப் பயன்படுத்தி உயர்தர தடுப்பூசிகள் சேமிக்கப்படுகின்றன என்றும் இதுவொரு சரியான சேமிப்பு முறையாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் USAID-இன் ஆதரவுடன் உக்ரைனுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அற்புதமான புதிய குளிர்சாதனப் பெட்டிகள் வழியாக நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்குப் போதுமான உபகரணங்களை வழங்கும் நோக்கில் முன்னேற்றத்திற்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Mammadzade.
அதுமட்டுமன்றி, யுனிசெஃப் நிறுவனம் உக்ரைன் முழுவதும் ஏறக்குறைய 5,000 நலப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி மற்றும் குளிர் பதன மேலாண்மை குறித்த 139 பயிற்சி கருத்தரங்குகளை நடத்தியுள்ளது என்றும், ஏறத்தாழ 6,600 தடுப்பூசி குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைகலன்கள் மற்றும் தடுப்பூசி போக்குவரத்துக்கான 36 குளிரூட்டப்பட்ட வாகனங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்