யுனிசெஃப் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகத் திட்டம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யுனிசெப் நிறுவனம் 43,000-க்கும் மேற்பட்ட மலேரியா தடுப்பூசியை விமானம் வழியாக மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான Bangui-க்கு வழங்கியுள்ளது என்றும், வரும் நாட்களில் 1,20,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படவுள்ளன என்றும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது அந்நிறுவனம்.
குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போடுவதற்காக R21 மலேரியா தடுப்பூசியைப் பெற்ற முதல் நாடு இதுவாகும் என்றும், இது நோயைத் தடுப்பதிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பதிலும் மற்றொரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
R21 மற்றும் RTS,S தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுப்பதில் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், RTS,S தடுப்பூசி கானா, கென்யா மற்றும் மலாவியில் 20 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு நான்கு ஆண்டு பைலட் திட்டத்தில் வழங்கப்பட்டது எனவும், இது அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்புகளில் 13 விழுக்காட்டு குறைப்பைக் காட்டியுள்ளது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் விநியோக பிரிவு இயக்குனர் Leila Pakkala அவர்கள், இரண்டு தயாரிப்புகளும் இப்போது நாடுகளுக்குக் கிடைக்கின்றன என்றும், இது மலேரியா தடுப்பூசிகளின் விநியோகத்தை விரிவுபடுத்துவது குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் உடலநலத்திற்கான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தேவையைப் பூர்த்தி செய்வதற்கான விநியோகத்தின் திறனைப் பற்றிய முந்தைய கவலைகள் இப்போது எங்களுக்குப் பின்னால் உள்ளன என்றும், தடுப்பூசிகள் ஆபத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சென்றடைவதே எங்கள் முன்னுரிமை என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார் பக்காலா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்