சூடான் குழந்தைகள் சூடான் குழந்தைகள்  

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சூடான் குழந்தைகள்!

லூசியா எல்மி : சூடான் குழந்தைகளுக்கு அமைதி தேவை; அமைதி இல்லாமல் அவர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து, எதிர்காலம் என்பது அவர்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே மாறிவிடுகிறது.

ஜெயந்த் ராயன்,வத்திக்கான்

சூடான் நாட்டில் பரவலான உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக இவ்வாண்டு 37 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என்று யூனிசெஃப் நிறுவனம் செய்தியொன்றை வெயிளியிட்டுள்ளது.

யூனிசெஃப் அலுவலகத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, அவ்வமைப்பின் அவசர நடவடிக்கைகளுக்கான இயக்குனர் லூசியா எல்மி கூறுகையில், முறையான கவனிப்புகள் இல்லாமல், 730,000-க்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்காலத்தில் எதிர்கொள்வார்கள் என்றும், இதனால் உரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது எவ்வளவு ஆபத்து என்பதை புரிந்து கொள்வது அவசியம் என்று கூறிய லூசியா எல்மி அவர்கள், இது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து தப்பித்தாலும், அவர்களின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் விளைவுகள் அவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்றும் கூறினார் .

குறிப்பாக, இக்குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது மற்றும் எவ்வாறு அவர்களின் உயிரைக் காப்பது போன்றவற்றில் தாங்கள் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், யூனிசெஃப் மற்றும் பல தன்னாரவ அமைப்புகளோடு இணைந்து இந்நிலை தொடராமல் இருக்க அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த லூசியா எல்மி அவர்கள், இந்த ஆண்டு மட்டும் 1,00,000-க்கும் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சூடானில் 1,80,000 குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மனிதாபிமானப் பொருள்களை வழங்குவதில் ஏற்பாடும் பிரச்சனைகளை எடுத்துரைத்த எல்மி அவர்கள், உள்ளநாட்டுப் போர், வன்முறைகள், மற்றும் அரசு அதிகாரிகளின் தடைகள் போன்றவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதைத் தடுப்பதாகவும், இதனால் எண்ணற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சூடான் குழந்தைகளுக்கு அமைதி தேவை என்றும், அமைதி இல்லாமல் அவர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து, எதிர்காலம் என்பது அவர்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது என்றும் கூறினார் லூசியா எல்மி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2024, 15:16