சூடானில் குழந்தைகளுடன் அவர்தம் அன்னையர் சூடானில் குழந்தைகளுடன் அவர்தம் அன்னையர்   (Albert Gonzalez Farran - AFP)

சூடானில் அதிக எண்ணிக்கையில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள்!

இன்று 25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும், இவர்களில் 10 கோடி குழந்தைகள் ஆப்பிரிக்காவில் உள்ளனர் - யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானில் ஏறக்குறைய ஒரு கோடியே 10 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஜூன் 26, இவ்வெள்ளியன்று, இத்தாலியின் திறிஸ்தேவில் நடைபெற்ற  G7 இத்தாலி 2024 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார் யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell

மோதலில் இருந்து தப்பி வந்த குழந்தைகள் நிறைந்த சூடானின் யுனிசெஃப் மையத்தை தான் பார்வையிட்டதாகவும், உடைகள், வீடுகள், நண்பர்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்தையும் அவர்கள் இழந்துவிட்டதாகவும் உரைத்துள்ள Russell அவர்கள், "நாங்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம், நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறோம்" என்று அங்கிருந்த பல பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.

அவர்களின் வலி நிறைந்த இந்தக் கதையை இன்று உங்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன், ஏனென்றால் அவர்கள் பயங்கரமான துயரங்களை அனுபவிக்கும் நிலையிலும், இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்றும்,  அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றும் உரைத்த Russell அவர்கள்,  வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களாக வேண்டும் என்று அப்பெண்கள் இன்னும் கனவு காண்கிறார்கள் என்ற உண்மை நிலையையும் தெரிவித்தார்.

உலகளாவிய சமூகமாக, நாம் இந்தப் பெண்களையும், இன்னும் இலட்சக்கணக்கான குழந்தைகளையும் அவர்களின் உலகமாகத் தவறிவிட்டோம் என்று கவலை தெரிவித்துள்ள Russell அவர்கள், இன்று 25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும், இவர்களில் 10 கோடி குழந்தைகள் ஆப்பிரிக்காவில் உள்ளனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2024, 15:18