அகதிகள் முகாமில் கல்வி கற்கும் பாலஸ்தீனிய சிறார் அகதிகள் முகாமில் கல்வி கற்கும் பாலஸ்தீனிய சிறார்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – புகலிடம் தேடுவோர் தினம் – ஜூன் 20

விரும்பி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த மனிதன், ஒரு காலக்கட்டத்தில் குடிபெயரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டான். அதன்பின் புலம் பெயரும் மக்களுக்கு வேறு வேறு பெயர்கள் வைத்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பூமித்தாயின் பிள்ளைகளுக்கு நம்பிக்கை அளிப்போம்! இப்பூமியை அனைவருக்கும் வரவேற்பையும், பாதுகாப்பையும், நிலையான வாழ்வையும் தரும் இடமாக மாற்றும் வகையில் நம் ஒருமைப்பாட்டுணர்வை செயல்படுத்துவோம் என அழைக்கிறது இம்மாதம் 20ஆம் தேதி நாம் சிறப்பிக்கும், புகலிடம் தேடுவோர் உலக தினம். ஐ.நா. நிறுவனத்தால் ஒவ்வோர் ஆண்டும் அனைத்து நாடுகளிலும் உலக புகலிடம் தேடுவோர் தினம் ஜீன் 20ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு ஜீன் 20ம் தேதி இந்த தினம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1951ம் ஆண்டு நடத்தப்பட்ட அகதிகளின் நிலை குறித்த மாநாட்டின் பொன் விழா ஆண்டை அங்கீகரிக்கும் விதமாக இந்தநாள் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஜூன் 20 ஆப்ரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவு கூறப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுஅவையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆப்ரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக புகலிடம் தேடுவோர் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கற்கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பின் ஆற்றுச்சமவெளி நாகரிகம் வளர துவங்கிய காலங்களில் மனிதன் ஆறுகளின் நீர் வளத்தை பயன்படுத்தி, தனக்கு வேண்டிய உணவைத் தேடி அலையாமல் தானே பயிரிட்டு உற்பத்தி செய்ய கற்றான். அதற்கு பின் நாடோடியாக இருந்த அவனது வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கி குடும்பமாக, கூட்டுக் குடும்பமாக, பிறகு கட்டுப்பாடுகளுடைய சமூக கூட்டமாக மாறியது.

காலப்போக்கில், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கண்டுபிடிப்புகளுடன் நாகரிகமும் அறிவியலும் கைகோர்த்து மனித வாழ்வை வளமாக்கின. நாளுக்கு நாள் அவனது தேவையும் தேடலும் அதிகமாகின. உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளைத் தாண்டி மனிதன் சிந்திக்கத் துவங்கினான். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவை பாட்டியின் முதுமொழி மனிதனின் தேடலுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கியது. அதுவரை காட்டுக்குள் வாழ்ந்த மனிதனின் தேடல், கடலைத் தாண்ட துவங்கியது. உள்நாட்டில் கிடைக்காத பல விடயங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்படி குடிபெயர்ந்த மக்களின் நோக்கங்கள் வேறுபடத் துவங்கின. விரும்பி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த மனிதன், ஒரு காலக்கட்டத்தில் குடிபெயரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டான். அதன்பின் புலம் பெயரும் மக்களுக்கு வேறு வேறு பெயர்கள் வைத்தனர். புலம்பெயர்ந்தோர், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் குடியேறிகள் என்ற வெவ்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, ஏறக்குறைய 28 கோடிக்கு மேல் புலம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காட்டிற்கும் அதிகமான எண்ணிக்கையாகும். உலகத்தில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த மக்களையும் வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு நாம் உலக புலம்பெயர்ந்தோர் குறித்தும், புகலிடம் தேடுவோர் குறித்தும் வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். 3 கோடி மக்கள் தொகை கொண்ட கனடாவில் 2.8 விழுக்காட்டு மக்கள் இந்தியர்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 6 விழுக்காட்டினர் இந்தியர்கள். இவர்கள் அதிக வருவாய் மற்றும் உயர்கல்வியுடன் திகழ்கின்றனர். இங்கிலாந்து மற்றும் ஹாலந்து நாட்டிலும் அதிக இந்திய மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவின் நாசாவில் 3 விழுக்காடு விஞ்ஞானிகள் இந்தியர்கள் என்றும், அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ ஆராய்ச்சி மையமான பென்டகனில் 4.5 விழுக்காட்டு இந்திய கணனி பொறியாளர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் வேலைக்காக புலம் பெயர்ந்தவர்களேயன்றி, புகலிடம் தேடி சென்றவர்கள் அல்ல. ஆனால், இன்று நாம் நோக்க உள்ளது புகலிடம் தேடுவோர் பற்றி. புகலிடம் தேடுவோருக்கான தினம் ஜூன் 20 என்றால், புலம்பெயர்ந்தோருக்கான நாள் டிசம்பர் மாதத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

புகலிடம் தேடுவோர் என்று நாம் பார்த்தோமானால் இன்றைய உலகில் 13 கோடியே 8 இலட்சம் பேர் தங்களுக்கென சொந்த நாடுகளின்றி, கட்டாயமாக புலம்பெயர வைக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். மக்கள் கட்டாயமாக புலம்பெயர வைக்கப்படும் நிலை இன்று நேற்று துவங்கியதல்ல. முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேம் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு இந்நிகழ்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சமூகநிகழ்வாக மாறியுள்ளது.

பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு போர், இனவெறி போராட்டங்கள், சமுதாய வேறுபாடுகள் மற்றும் சமூக அநீதி போன்ற பல காரணங்களுக்காக மனிதன் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தான். போர் மற்றும் உள்நாட்டு மோதல்களினால் அகதிகளாக செல்லும்போது நடைபெறும் கலவரம் மற்றும் இயற்கை பேரிடர்களாலும் பலர் இறந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி செல்லும்போது பலர் நடுக்கடலிலேயே இறந்தும் விடுகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல் கடல் வழியாக செல்லும் போது ஏறக்குறைய 3700க்கும் அதிகமான மக்கள் நடுக்கடலிலேயே இறந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வந்தபோது, துருக்கியில் படகுகள் மூழ்கியதால் அயிலன் குர்தி உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தது நமக்குத் தெரியாததல்ல. துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவன் அயிலன் குர்தியின் புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது, பலரின் கண்களையும் நினைவுகளையும் விட்டு இன்னும் அகலவில்லை. அலைநீரில் கரை ஒதுங்கிய அந்த விறைத்த உடல் ஓர் அழகிய சிற்பமாய் அலைகள் தாலாட்ட அமைதியாய் குப்புறப்படுத்திருந்தது, எத்தனை பேரை நிலைகுலைய வைத்து, எத்தனை நாள் தூக்கத்தைக் கலைத்தது என்பதும் உண்மை. பணத்திற்கும், அதிகாரத்திற்குமான மோதல்களில் பலிகடாக்கள் ஆக்கப்பட்டு கடல் வழி தப்பித்து ஓடும்போது இழந்த உயிர்கள் எத்தனை எத்தனை?.  ஆதிக்க வெறியும், பேராசையும் கொண்ட மனித செயல்கள் இந்த பூமியை நடுங்கச் செய்கின்றன, மழலைகளின் உயிரைப் பறிக்கின்றன.

யூனிசெஃப் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஏறக்குறைய 1 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பான இடம் தேடி புலம் பெயர்ந்துள்ளதாக குறிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏறக்குறைய பத்து இலட்சம் குழந்தைகள் இன்னமும் புலம் பெயர் நாடுகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். 2015ஆம் ஆண்டு மட்டும் புலம் பெயர்வதற்காக ஐ,நா சபையால் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏறக்குறைய 45 விழுக்காட்டினர் சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு குழந்தைகளாம். இப்போது உக்ரைன் நாட்டு குழந்தைகளும் இணைந்துள்ளார்கள்.

சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும், இருப்பிடத்தையும் விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். உயிர் பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தின் இலட்சியம் வேறொன்றும் இல்லை.

போர், வன்முறை, துன்புறுத்தலால் பாதிப்பட்டு தங்கள் நாடுகளை, உடமைகளை விட்டு ஏதுமின்றி தஞ்சம் தேடி வருபவர்கள், பன்னாட்டு எல்லைகளைக் கடந்து அடுத்த நாட்டினரிடம் தஞ்சம் கேட்கவேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அகதிகள் கையில் கிடைத்த ஓரிரு துணிகள் மற்றும் உடமைகளுடனும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் பல்வேறு நாடுகளைத் தேடி ஓடுகிறார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் 20 பேர் அகதிகளாக்கப்படுகிறார்கள். போர், வன்முறை, மற்றும் தீவிரவாதத்தில் இருந்து அவர்கள் தப்பிப் பிழைக்க வேண்டியுள்ளது. இவர்கள் வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு முகவரி தொலைத்த முகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம் இவர்களுடையது. முகாம்களில், முகம் தெரியாமல், முகவரி தொலைத்து ஏங்கி தவிக்கும் உள்ளங்கள் இவர்கள். வேற்று நாட்டவர்கள் என்ற கட்டுப்பாட்டில், திறந்த வெளியில் கைதிகளாக சிறைப்படுத்தப்படும் கொடுமை பல இடங்களில் அரங்கேறுகிறது. துப்பாக்கி தோட்டாக்களின் இரைச்சலால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல; நலம் நாடி வந்தவர்கள், வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை என்ற நிலையில், என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே ஜூன் 20ன் முக்கியமான நோக்கமாகும். உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்று நாம் கூறித் தெரியவேண்டியதில்லை.

நாடில்லாதவர்களாக, எந்த நாட்டையும் சேராதவர்களாக, எந்த தேசத்தின் அங்கீகாரமும் கிடைக்காதவர்களாக வாழும் புகலிடம் தேடும் அப்பாவி மக்களுக்கு, வேலை உரிமை, கல்விபெறும் உரிமை, உறைவிட உரிமை, எந்த மதத்தையும் தழுவும் உரிமை, நீதிமன்றத்தை நாடும் உரிமை, அவர்களின் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை பெறும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை அவர்கள் பெற வேண்டும் என அனைத்து நாடுகளையும் விண்ணப்பித்துவருகிறது ஐ.நா. அமைப்பு. இதில் முழு வெற்றி கிட்டுமா என்பது நம் ஒத்துழைப்பைச் சார்ந்து உள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2024, 12:22