வெள்ளநீரில் மக்கள் வெள்ளநீரில் மக்கள்  (AFP or licensors)

வங்கதேசம் மற்றும் இந்தியாவில் பெருவெள்ள பாதிப்பு!

17 கோடி மக்களைக் கொண்டுள்ள வங்கதேசம், கடந்த பத்தாண்டுகளில் பலமுறை பெருவெள்ள பாதிப்பைச் சந்தித்து வருகிறது : யூக்கான் செய்தி நிறுவனம்

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

அண்மையில் வங்கதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்த்தால் 18-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததுடன், இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பெருவெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், நாட்டின் தாழ்வான பகுதிகளில் நீர் வற்றத் தொடங்கிய நிலையில் 30,000-க்கும் அதிகமானோர் இன்னும் அவசரகால முகாம்களில் உதவி வேண்டியுள்ளனர் என்றும் அச்செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசிற்கு இவ்வெள்ள பாதிப்பானது ஒரு சவாலாக இருக்கிறது என்றும், இராணுவம், விமானம் மற்றும் கடற்படை உட்பட மீட்புக் குழுக்கள் அனைத்தும் இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.

மேலும் அரசு உதவிகள் தவிர, சாதாரண மக்கள் குழுக்களாக இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்து வருகின்றனர் என்றும், 17 கோடி  மக்களைக் கொண்டுள்ள வங்கதேசம், கடந்த பத்தாண்டுகளில் பலமுறை வெள்ள பாதிப்பைச் சந்தித்து வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகிறது.

இந்தியாவில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு

முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால்  31 பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமானது அரசுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆற்றி வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்புக் குறிப்பிடுகின்றது.

ஆகஸ்ட் 20, செவ்வாய் அன்று ஒரே நாளில் 288.8 மிமீ  மழை பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் வகையில், பல பரந்த பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது என்றும், ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் 450 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2024, 14:00