மழைவெள்ளத்தில் பங்களாதேஸ் மக்கள் மழைவெள்ளத்தில் பங்களாதேஸ் மக்கள்  (AFP or licensors)

தொடர் கன மழையால் பாதிக்கப்படும் பங்களாதேஸ்

காலநிலை மாற்றமானது வானிலை முறைகளை மாற்றுகிறது இதனால் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பங்களாதேசில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் நீர்புகுந்து 2 பேர் இறந்துள்ளனர் என்றும், இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் பங்களதேஸ் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறையின் மூத்த அதிகாரி முகம்மது நஷ்முல் அபேதின்.

ஆகஸ்ட் 22 வியாழன்று உகான் செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ள முகம்மது நஷ்முல் அபேதின் அவர்கள், தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறைந்தது எட்டு மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 29 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 70,000க்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டிலிருந்து, வேறு தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார் அபேதின்.

உலகளாவிய காலநிலை ஆபத்துக் குறியீட்டின்படி, பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்று பங்களாதேஷ் என்றும், ஆண்டுதோறும் பொழியும் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் பரவலான அழிவை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றமானது வானிலை முறைகளை மாற்றுகிறது. இதனால் தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ள அபேதின் அவர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதிகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் அதிவேக படகுகள் மற்றும் வானூர்திகள் வழியாக இராணுவம் மற்றும் கடற்படையினர் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2024, 14:31