அடிப்படை உதவிபொருள்கள் பெறும் ஏமன்  சிறுவன் அடிப்படை உதவிபொருள்கள் பெறும் ஏமன் சிறுவன்  (AFP or licensors)

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் ஏமன் சிறார்

நோய், நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றோடு மோதல், வன்முறை அதனால் ஏற்படும் இடம்பெயர்வு, நிலையற்ற பொருளாதாரம் ஆகியவையும் குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக் காரணமாக அமைகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது என்றும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மிகவும் சிக்கலான நிலைமைகள் பதிவாகியுள்ளன என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் ஏமன் யுனிசெஃப் பிரதிநிதி பீட்டர் ஹாக்கின்ஸ்.

ஆகஸ்ட் 19 திங்கள் கிழமை வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள பீட்டர் ஹாக்கின்ஸ் அவர்கள், உணவு, நீர், நலவாழ்வுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதன் வழியாகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கானக் காரணங்களைத் தீர்க்க அவசர மற்றும் நீடித்த பன்னாடு ஆதரவையும் உடனடி நடவடிக்கையையும் வலியுறுத்தியுள்ளார்.

ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றாது என்றும், 600,000 குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 120,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார் ஹாக்கின்ஸ்.

 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 223,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

நோய், நீர், உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றோடு மோதல், வன்முறை அதனால் ஏற்படும் இடப்பெயர்வு, நிலையற்ற பொருளாதாரம் ஆகியவையும் குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக் காரணமாக அமைகின்றன மற்றும் அதன் அளவை அதிகரிக்கின்றன என்றும் கூறினார் ஹாக்கின்ஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2024, 10:57