தடுப்பூசி தடுப்பூசி   (AFP or licensors)

காசா குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி வழங்க போர் இடைநிறுத்தம் தேவை!

யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் காசா மற்றும் மண்டலப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க போலியோ தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளனர் : யுனிசெஃப் தலைமை இயக்குநர் Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் உள்ள குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி வழங்குவதற்குப் போர் இடைநிறுத்தம் தேவை என்று கூறியுள்ளது காசாவிற்கான யுனிசெஃப் நிறுவனம்.

ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று இத்தகவலை தனது எக்ஸ்தள பக்கத்தில் வழங்கியுள்ள அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், 10 மாதக் குழந்தைக்கு போலியோ பாதிப்பு உட்பட, காசாவில் உள்ள குழந்தைகள் உயிருக்கும் உடல்நத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் காசா மற்றும் மண்டலப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க போலியோ தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள Russell அவர்கள், ஆனால் இதனைச் செய்வதற்கு ஒரு போர் இடைநிறுத்தம் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துயரத்தின் பிடியில் மக்கள்

போரால் காசாவில் இதுவரை 38,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 விழுக்காடாகும். அதேபோல 3.7 விழுக்காட்டு மக்கள் அதாவது, 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2024, 13:49