போலியோ தடுப்பு மருந்து பெறும் குழந்தை போலியோ தடுப்பு மருந்து பெறும் குழந்தை  (ANSA)

காசாவில் போலியோ வைரஸ் இரண்டாம் வகை தடுப்பு மருந்து

காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு நகராட்சி மருத்துவமனைகள், கள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 708 குழுக்களால் தடுப்பு மருந்து கொடுக்கப்பட இருக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போலியோ வைரஸ் இரண்டாம் வகை (cVDPV2) பரவுவதைத் தடுக்க காசா பகுதியில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இரண்டு சுற்று போலியோ தடுப்பு மருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய நலவாழ்வு அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு, UNICEF, UNRWA மற்றும் பல கூட்டமைப்புக்களுடன் இணைந்து, 6,40,000 க்கும் மேற்பட்ட பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் வகை புதிய வாய்வழி போலியோ (nOPV2) தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது.

காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு நகராட்சி மருத்துவமனைகள், கள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 708 குழுக்களால் தடுப்பூசி போடப்பட இருப்பதாகவும், நடமாடும் குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட ஏறக்குறைய 2,700 நலவாழ்வுப் பணியாளார்கள், போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்றும், போலியோ நோய்த்தொற்றின் அபாயத்தைத் தணிக்கும் முயற்சிகளுள் ஒன்றாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

காசா பகுதியானது கடந்த 25 ஆண்டுகளாக போலியோ இல்லாத பகுதியாக இருந்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக போலியோ பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதன் அதிகமான பரவல் விகிதமானது, காசா பகுதி மற்றும் அண்டை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது என்றும்

காசா பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர் நிறுத்தம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

போலியோ பரவுவதைத் தடுக்கவும், அது மீண்டும் எழும் ஆபத்தைக் குறைக்கவும், காசா பகுதியில் நீர் மற்றும் சுகாதார அமைப்புகளின் கடுமையான சீர்குலைவுகளைக் கருத்தில் கொண்டு, பிரச்சாரத்தின் ஒவ்வொரு சுழற்சியிலும் குறைந்தது 95 சதவிகித தடுப்பூசி பாதுகாப்பு தேவைப்படுகிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 10:27