சுவிட்சர்லாந்தில் பெண்ணுரிமை போராட்டம் சுவிட்சர்லாந்தில் பெண்ணுரிமை போராட்டம்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – ஆக.26. பெண் சமத்துவ தினம்

பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களை நடத்துவதாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்' என பெண்கள் எழுச்சி பெற முழங்கினார் பாரதியார். இது நிகழ்காலத்தில் ஓரளவு நிஜமாகி உள்ளது. “மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டு மம்மா!” என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும், வாய்ப்புகள் வழங்க வேண்டும் என அமெரிக்காவில் கிளர்ந்து எழுந்த பெண்களின் வெற்றியை உரக்க சொல்வதுதான் ‘பெண்கள் சமத்துவ தினம்’.   இந்த நாளைத்தான் இத்திங்களன்று, அதாவது ஆகஸ்ட் 26ஆம் தேதி உலக சமத்துவ தினமாகக் கொண்டாடினோம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என இந்த நாள் வலியுறுத்துகிறது. அதே போல ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும், போராடி பெற்ற வெற்றிகளையும் உலகறிய செய்வதே இந்த மகளிர் சமத்துவ நாளின் முக்கிய நோக்கம்

பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்துவதாகும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது போல் எல்லா வாய்ப்புகளிலும் சம உரிமை வேண்டும் என்று பெண்கள் தங்களுக்காக போராடத் தொடங்கியதைத் தொடர்ந்து, 1920-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் நாள், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதை நினைவுகூரும் விதமாகவும், ஆண்களும் பெண்களும் இணையானவர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 26-ம் தேதி, 'பெண்கள் சம உரிமை' நாளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொண்டாடப்பட துவக்கப்பட்டது, இப்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. கடந்துவந்த பாதைகளை கொஞ்சம் உற்று நோக்கினால், பல நல்ல பெண் தலைவர்களை இந்த உலகம் உருவாக்கித் தந்துள்ளது.

மாற்றம் தந்த பெண் தலைவர்கள் சில

உலகில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண் தலைவர்கள் என்று பார்த்தோமானால், இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர், மேன்மைக்குரிய திரவுபதி முர்மூ, அமெரிக்காவின் பெண் துணை அரசுத்தலைவராக பதவியேற்று, தற்போது அரசுத்தலைவர் தேர்தலுக்கு நிற்கும் கமலா ஹாரிஸ். தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை விட இரண்டு மடங்கு அதிகமாக வாக்குகள் பெற்று தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக 2016-ம் ஆண்டு பதவியேற்ற சை இங் வென்,

ஜெர்மனியில் நீண்ட காலம் அதிபராக (2005-2021) இருந்தவர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஏஞ்சலா மெர்கல் என பல பெண் தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம். சிறிது பின்னோக்கிச் சென்றால், இலங்கையின் சிறிமாவோ பண்டாராநாயக், இந்தியாவின் இந்திரா காந்தி, இஸ்ராயேலின் கோல்டா மேயர், இங்கிலாந்தின் மார்க்ரெட் தாச்சர், பாகிஸ்தானின் பெனசீர் பூட்டோ, பிலிப்பீன்சின் கொரசின் அக்கீனோ, மியான்மாரின் அவுங் சான் சூ கி, தமிழகத்தின் முதல் மந்திரி செல்வி ஜெயலலிதா என பெயர்களை அடுக்கிக் கொண்டேச் செல்லலாம். அரசுத் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களே நூற்றுக்கு மேல் வருகிறார்கள். ஆனால் இன்றைய உண்மை நிலைகள், அதாவது பாலின சமத்துவம்  என்ன என நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நடப்பு நிலை அளவீடுகள்

பாலின இடைவெளிக் குறியீட்டைக் கணக்கிடுவதை வைத்துத்தான் பாலின சமத்துவம் மதிப்பிடப்படுகிறது என்பது உண்மை. இதில் துணைக்குறியீடுகளாக, பெண்களின் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, பெண்கள் கல்வி பெறுதல், பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் வாழும்நிலை, பெண்களின் அரசியல் அதிகாரம் என்பவை முன்வைக்கப்பட்டு அதுகுறித்த நடப்பு நிலை அளவீடுகள் எடுக்கப்படுகின்றன. நலவாழ்வு, கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலின இடைவெளிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த WEF என்ற அரசு சாரா பன்னாட்டு பொருளாதார மன்றத்தின் அறிக்கை உலகளவில் ஒரு திசைகாட்டியாக செயல்படுகிறது.

2024ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி மதிப்பெண் 68.5%ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் போது 0.1% மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போதைய தரவுகளின்படி, உலகளவில் கல்விபெறுவதில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 20 ஆண்டுகளும், பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 152 ஆண்டுகளும், அரசியல் அதிகாரத்தில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 169 ஆண்டுகளும் பெண்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்ற கவலை தரும் தகவல்களையும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளாக, ஐஸ்லாந்து 93.5 விழுக்காட்டுடன், உலகின் பாலின சமத்துவமிக்க நாடுகளில் முதன்மையான நாடாக திகழ்கிறது. அதைத்தொடர்ந்து ஃபின்லாந்து 87.5%, நார்வே 87.5%, நியூசிலாந்து 83.5%, ஸ்வீடன் 81.6%, நிக்கரகுவா, ஜெர்மனி, நமிபியா, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இங்கு நாம் பார்த்தோமென்றால், இங்கிலாந்து 14ஆவது இடத்திலும், அமெரிக்கா 43ஆவது இடத்திலும் உள்ளன. குறிப்பாக தெற்காசியாவில் பங்களாதேஷ் (99ஆவது இடம்) மட்டுமே முதல் 100 நூறு நாடுகளுக்குள் இடம் பெற்றுள்ளது. இதில் நேபாளம் 117ஆவது இடத்தையும், இலங்கை 122ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 64.1 விழுக்காட்டுடன் 129ஆவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். உலகளவில் மொத்தமுள்ள 146 நாடுகளின் வரிசையில், இந்தியா கடைசி 20 இடங்களுக்குள் உள்ளது. முக்கியமாக 'பெண்கள் கல்வி பெறுதல்' மற்றும் 'பெண்களின் அரசியல் அதிகாரம்' ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே இந்தியாவில் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் சூடான் முறையே 145, 146 என கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

அதிக பாலின இடைவெளிகளை குறைத்துள்ள பகுதிகளின் வரிசையில் ஐரோப்பா 75% உடன் முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து வட அமெரிக்கா (74.8%) மற்றும் லத்தீன் அமெரிக்கா & கரீபியன் பகுதிகள் உள்ளன. இதில் தெற்காசியப் பகுதி 63.7 விழுக்காட்டுடன் 7ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதி இதில் இறுதியாக எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், மொத்த தெற்கு ஆசியாவிலும் அரசியல் அதிகாரத்தில் பாலின சமத்துவமின்மை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக தற்போது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின்பு புதிதாக அமைக்கப்பட்ட இந்திய அமைச்சரவையில் உள்ள 30 ஒன்றிய அமைச்சர்களில் (Cabinet Positions) இருவர் மட்டுமே பெண்கள். ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஏழு பேர் மட்டுமே பெண்கள்.

அதே சமயம் இடைநிலைக் கல்வியில் சேர்வதில் இந்தியா சிறந்த பாலின சமத்துவத்தைக் கொண்டுள்ளது. இதே போன்று 'பொருளாதார பங்கேற்பு' மற்றும் 'வாய்ப்பளித்தல்'  பிரிவிலும் (39.8%) இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஒட்டுமொத்தமாக சர்வதேசத் தரவுகளை ஆய்வு செய்கையில், உலகளவில் பாலின சமத்துவம் ஏற்பட்டு, பாலின இடைவெளி குறியீட்டில் சமநிலை அடைய பெண்கள் இன்னும் 134 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது ஐந்து தலைமுறைகளைக் கடப்பதற்கு சமம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது!

(ஆதாரம்: WEF - Global Gender Gap Report 2024)

நமக்கென சில கேள்விகள்

பெண் தலைவர்கள் குறித்துக் கண்டோம், சமத்துவம் குறித்தவைகளில் தரவுகளின் குறு பட்டியல் ஒன்றையும் கண்டோம். இப்போது நம்மையே நாம் சோதனைக்கு உட்படுத்தவேண்டிய நேரம் வந்துள்ளது. 104 வருடங்களாக 'பெண்கள் சம உரிமை நாள்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சில கேள்விகளை நம் முன் வைத்துப் பார்ப்போம்.  

ஒரே வீட்டில் வளரும் ஆண், பெண் பிள்ளைகளில், உணவில் இருந்து உணர்ச்சிகள்வரை இருவரும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெற்று வளர்கிறார்களா என்பதை முதலில் கேட்டுப் பாருங்கள்.

பெண்களின் பள்ளிக் கல்விக்கான தடைகள் இன்று பெரும்பகுதி விலகியுள்ளன என்பது உண்மையெனினும், மேற்கல்விக்கான உரிமை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வழங்கப்படுகிறது என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

'வேலைக்குப் போகணும்' என்று ஒரு பெண் சொல்லும்போது, ஆண் மகன்களைப் வழியனுப்பிவைக்கும் அதே உவகையுடன் பெண் பிள்ளைகளையும் வழியனுப்பிவைக்கும் குடும்பங்கள் எத்தனை உள்ளன?

அலுவலகங்களில் ஆண்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அதே அங்கீகாரம் பெண்களின் உழைப்புக்கும் தரப்படுகிறதா? பாகுபாடு இல்லாமல் நடத்தப்படுகிறார்களா?

எந்த வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை பெண்களால் முடிவெடுக்க முடிகிறதா? ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளியைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்குத் தரப்படுகிறதா? கருவில் வளர்த்தெடுத்த தன் குழந்தைக்கு, பெயர் வைக்கும் உரிமையாவது பெண்ணுக்கு இருக்கிறதா?

ஆணின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து தங்களை விடுவித்து வாழும் பெண்களை சமூகம் மனதார ஏற்கிறதா? பெண்களுக்கான சம உரிமை என்பது, குடும்பம், கல்வி, அரசியல், கலை, நிர்வாகம், விளையாட்டு என்று ஏதாவது ஒரு தளத்திலாவது முழுமையாகக் கிடைக்கப் பெற்றிருக்கிறதா?

இன்றும் எத்தனைப் பெற்றோர், ‘பொறுப்பு முடிந்தால் போதும்’ என்ற மனநிலைக்கு வந்து, சின்ன வயதிலேயே பெண்பிள்ளைகளை மணமுடிக்க வைத்து, கரை சேர்த்துவிட்டோம் என திருப்திப்பட்டுக் கொள்வதில்லையா? இதனை பெண் உரிமை மறுப்பாக பார்க்கத் தோன்றவில்லையா?.

தாய்க்கு அடுப்படியில் உதவும் மனப்பாங்கை, பெண்பிள்ளைகளைப் போல் ஆண்பிள்ளைகளுக்கும் ஏன் கற்றுத்தருவதில்லை? அப்போதுதான் வருங்காலத்தில் தனது மனைவிக்கு உதவும் மனப்பாங்கு ஆண்களிடம் ஏற்படும் என்பதை நாம் ஏன் உணர்வதில்லை?.

“பெண்மையை போற்றுவோம்; பெண் உரிமை மறுப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பு!” என்பதை உணர்வோம்.

அன்னை தெரேசா பிறந்த நாள்

இந்த வேளையில், இன்னொரு புகழ் வாய்ந்த பெண்மணி ஒருவர் குறித்து கூறிக்கொள்ள ஆவல் கொள்கிறோம். அல்பேனியாவில் பிறந்து, கொல்கத்தாவில் சேவை செய்த அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளும் இதே ஆகஸ்ட் 26ஆம் தேதிதான். 1910ஆம் ஆண்டு பிறந்து சமுதாயச் சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்த அன்னை தெரேசாவின் பிறந்த நாளை நினைவுகூரும் இவ்வேளையில், எத்தனை அன்னை தெரேசாக்களை உருவாக்க நாம் உதவப் போகிறோம் என சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2024, 13:34