யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்   (AFP or licensors)

யாகி சூறாவளியால் தெற்காசியாவில் 60 இலட்சம் குழந்தைகள் பாதிப்பு!

இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கிய மிகவும் வலிமைவாய்ந்த புயலான யாகி புயல், அதிகமான மழைப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கொடிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

யாகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வியட்நாம், மியான்மார், லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் பேரழிவை ஏற்படுத்தி, ஏறத்தாழ 60 இலட்சம் குழந்தைகளைப் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வழங்கியுள்ள இந்நிறுவனம், தூய்மையான தண்ணீர், கல்வி, உடல்நலம், உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கான அணுகலை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான யுனிசெஃப்  மண்டல இயக்குனர் June Kunugi அவர்கள், யாகி புயலால் ஏற்பட்ட அழிவின் மிக மோசமான விளைவுகளை மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்கின்றன என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தூய்மையான தண்ணீர், கல்வி மற்றும் உடலநலம் உட்பட குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதே முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள Kunugi அவர்கள், தென்கிழக்கு ஆசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரிப்பு, காலநிலை மாற்றத்தால் மோசமடைகிறது என்றும், பேரழிவு ஏற்படும்போது, ​​குழந்தைகள்தாம் பெரும்பாலும்  அதிகமான பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள் என்பதே ஒரு சோகமான நினைவூட்டலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கிய மிகவும் வலிமைவாய்ந்த புயலான யாகி புயல், அதிகமான மழைப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கொடிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, 550-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 550-க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்களை சேதப்படுத்தப்பட்டன என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

குறிப்பாக, மியான்மாரில், நடந்து வரும் மோதல் மற்றும் பேரழிவுகரமான யாகி சூறாவளியின் இரட்டை தாக்கம், ஏற்கனவே மோதலால் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு மேலும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதுடன், மோசமான மனிதாபிமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் உரைக்கிறது அவ்வறிக்கை.

மியான்மாரில் இந்த யாகி புயலால் 170-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 3,20,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அதேவேளையில், மத்திய மியான்மர் முழுவதும் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும், மின்சார உள்கட்டமைப்பு யாவும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2024, 14:45