புலம்பெயர்ந்த லெபனோன் சிறார் புலம்பெயர்ந்த லெபனோன் சிறார் 

குழந்தைகளை உடலளவில் உணர்வளவில் பாதிக்கும் போர்

பல மாதங்களாக நடைபெற்று வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலால் காயமின்றி உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், தங்களைச் சூழ்ந்துள்ள வன்முறை மற்றும் குழப்பத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பேரழிவு தரும் போரானது குழந்தைகளின் உடல் மற்றும் உணர்வுகள் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும், இதுவரை 166 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 1,168 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் லெபனோன் நலவாழ்வு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார் யுனிசெஃப் இயக்குநர் கேத்தரின் ரஃபேல்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024ஆம் ஆண்டு அக்டோபர் வரை போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையினை அக்டோபர் 31 வியாழனன்று வெளியிட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ள லெபனோனின் நலவாழ்வு அமைச்சகமானது அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஏறக்குறைய நாளொன்றிற்கு ஒரு குழந்தை  கொல்லப்பட்டும் 10 பேர் காயமடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

லெபனோனில் நடந்து வரும் போர் குழந்தைகளின் வாழ்க்கையை சீர்குலைத்து, பல நேரங்களில் கடுமையான உடல் காயங்களையும், ஆழ்ந்த உணர்ச்சி வடுக்களையும் ஏற்படுத்துகிறது என்றும், பல மாதங்களாக நடைபெற்று வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலால் உடல்ரீதியாக காயமின்றி உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், தங்களைச் சூழ்ந்துள்ள வன்முறை மற்றும் குழப்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் ரஃபேல்

பிரிவினை கவலை, இழப்பு குறித்த பயம், தனிமைப்படுத்தல், ஆக்கிரமிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்ட அதிக பயம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை யுனிசெஃப் குழுக்கள் சந்தித்துள்ளன என்றும், பலரும் தூக்கமின்மை, எதிர்மறையான கனவுகள், தலைவலி, பசியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் ரஃபேல்.

குழந்தைகளுக்குத் தேவையான, பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழல்களை போர் அழிக்கிறது என்றும், நீண்டகால அதிர்ச்சிகரமான அழுத்தத்தைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அதன் விளைவுகளான கடுமையான உடல்நலம் மற்றும் உளவியல் அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஃபேல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 12:23