கற்பனை செய்ய முடியாத வழிகளில் பறிக்கப்படும் குழந்தைகள் வாழ்வு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒவ்வொரு நாளும், இஸ்ரயேல், பாலஸ்தீன், லெபனோன் ஆகிய நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கை கற்பனை செய்ய முடியாத வழிகளில் பறிக்கப்படுகிறது என்றும், போர் மற்றும் வன்முறையினால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல்.
குழந்தைகள், உதவிப் பணியாளர்கள், பள்ளிகள், சுகாதார வசதிகள், உள்கட்டமைப்புகள் உட்பட பொதுமக்களைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் கடமைப்பட்டுள்ளனர் என்றும், உயிர்காக்கும் உதவிகளை தடையின்றி மக்களுக்குக் கிடைக்கப்பட வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ரஸ்ஸல்.
குழந்தைகள் போர்களைத் தொடங்குவதில்லை, அவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் ஆற்றல் இல்லாதவர்கள், இருப்பினும் அவர்களின் வாழ்க்கை போர், வன்முறை மற்றும் மோதலால் அழிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
வன்முறை மற்றும் போரினால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர், அனாதைகளாக்கப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ரஸ்ஸல் அவர்கள், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அனுபவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
குழந்தைகளின் மரணம் மற்றும் துன்பங்கள் வெட்கக்கேடானது என்றும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மனிதகுலத்தின் மிக அடிப்படையான மதிப்புகளை அவமதிப்பதாகும் என்றும் வலியுறுத்தியுள்ள ரஸ்ஸல் அவர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்