புலம்பெயர்ந்தோர் பயணித்த கிழக்கு மத்தியதரைக் கடலில் மீண்டுமொரு விபத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரண்டு நாள்களுக்கு முன்பு ஏஜியன் கடலில் அதாவது, துருக்கிக்கும், கிரீஸுக்கும் இடையிலான கிழக்கு மத்தியதரைக் கடல் இடம்பெயர்வுப் பாதையின் ஊடாக சிறிய படகில் 40 பேர் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த எட்டு பேரில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மாநில அலுவலகத்தின் இயக்குநர் மற்றும் ஐரோப்பாவில் இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரான Regina De Dominicis அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள Regina அவர்கள், 2014-ஆம் ஆண்டு முதல், குறைந்தது 2,508 பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், அவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் மோதல்கள் மற்றும் வறுமையினால் வெளியேறியவர்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த, இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான உடன்படிக்கையைப் பயன்படுத்துமாறு அரசுகளைத் தாங்கள் கேட்டுக்கொள்வதாக உரைத்துள்ள Regina அவர்கள், பாதுகாப்பைத் தேடும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வ மற்றும் அணுகக்கூடிய வழிகளை உறுதிசெய்தல் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணைவது ஆகியவை இதில் அடங்கும் என்றும் விளக்கியுள்ளார்.
மேலும் கடலில் ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பான தரையிறக்கம், சமூகம் சார்ந்த வரவேற்பு மற்றும் புகலிட சேவைகளுக்கான அணுகல் ஆகியவை இந்த மரணங்களைத் தடுப்பதற்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் Regina.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்