குழந்தைகள் குழந்தைகள் 

4 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் உயிரிழப்பு

இந்தியாவில் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14ஆம் தேதி சிறப்பிக்கப்படும் அதேவேளை, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இன்றைய உலகில் ஏறக்குறைய 100 கோடி குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் ஏழ்மை நிலையில் வாழ்வதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனமான யுனிசெப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நவம்பர் 20, புதன்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்படும் உலக குழந்தைகள் தினத்தையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, உலகில் 30 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் வறிய குடும்பங்களில் வாழ்வதாகவும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2.15 டாலருக்குக் குறைவாகவேக் கிட்டுவதாகவும் அதில் கவலையைத் தெரிவித்துள்ளது.    

மேலும், 5 வயதிற்குட்பட்ட ஏறக்குறைய 40 கோடி குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் உடலளவில் துன்புறுத்தப்படுவதும் வீடுகளில் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதும் இடம்பெறுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் கூற்றுப்படி, காலநிலை மாற்றங்களால் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் வாழ்வதாகவும், வன்முறை நடவடிக்கைகளால் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை என உயிரிழப்பதாகவும், 40 கோடி குழந்தைகள் மோதல் இடம் பெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் அல்லது அப்பகுதிகளில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.                                                

குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில்,  அந்த மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் விதிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்ற கவலையை வெளியிட்ட யுனிசெப்பின் இத்தாலிய பிரிவு தலைவர் Carmela Pace அவர்கள், இவ்வாண்டு உலக குழந்தைகள் தினத்திற்கென இத்தாலியில், வருங்காலத்திற்கு செவிமடுங்கள் என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்தியாவில் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14ஆம் தேதி சிறப்பிக்கப்படும் அதேவேளை, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2024, 15:14