வீட்டில் பொழுதுபோக்க பயன்படும் தொலைக்காட்சி வீட்டில் பொழுதுபோக்க பயன்படும் தொலைக்காட்சி 

வாரம் ஓர் அலசல் – நவ. 21. உலக தொலைக்காட்சி தினம்

புது வீடு கட்டி வீட்டுசாதனங்கள் வாங்கும்போழுது தொலைக்காட்சிப் பெட்டியும் இடம்பெறுகிறது. மனிதனின் தகவலறியும் தாகமும், பொழுதுபோக்கும் சிந்தனையும் இதற்கு காரணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இன்றைய உலகம் முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுகொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மின்னணு சாதனங்கள் அவசிய தேவையாகிவிட்டது என்பது எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் விடயம். முன்னரெல்லாம் வெளியூருக்கு சென்றவர்களிடத்திலிருந்து தகவல் பெறுவதற்கே வெகு நாட்களாகும். ஆனால் இன்று நமது கைகளில் தொலைபேசிகளும் அலைபேசிகளும் இந்த உலகையே ஒரு கிராமமாக்கிவிட்டன. ஊடகங்களின் வழி நாம் மிக அருகில் வந்துவிட்டோம், அதேவேளை, மிகத்தூரமாகவும் போய்விட்டோம். இத்தகைய ஒரு பின்னணியுடன்தான் இவ்வாரத்தில் அதாவது, நவம்பர் 21ஆம் தேதி உலக தொலைக்காட்சி தினத்தைச் சிறப்பிக்கின்றோம். 1996 டிசம்பர் 17ஆம் தேதி இந்நாளை உருவாக்கியது ஐ.நா. நிறுவனம். 500 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களாக இருக்கும் நிலையில், இது வளர்ந்துகொண்டேயிருக்கிறது, இன்னும் 5 ஆண்டுகளில், அதாவது 2029ல் இது 550 கோடியாக உயரும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது.

உலகில் வாழக்கூடிய ஏழை, பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடுகளும் இன்றி எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி என்பது காணப்படவேச் செய்கின்றது. தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை. அறிவியல் கண்டுப்பிடிப்புகளில் ஒன்றுதான் நம் வீடுகளில் அன்றாட அவசியத் தேவையாக கருதப்படுகின்ற தொலைக்காட்சியாகும். புது வீடு கட்டி வீட்டுசாதனங்கள் வாங்கும்போது தொலைக்காட்சிப்பெட்டியும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக வந்துவிட்டது. மனிதனின் தகவலறியும் தாகமும், பொழுதுபோக்கும் சிந்தனையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

1920களின் பின்பாதியில் கருப்பு–வெள்ளை தொலைக்காட்சி உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 15, 1959இல் இந்தியாவிற்கு தொலைக்காட்சி வந்தது. 1988ல் கொண்டுவரப்பட்ட புதிய ஒளிபரப்புக் கொள்கைகளின் மூலம் இந்தியாவில் அதிகமான தொலைக்காட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு இன்று வரைக்கும் தொலைக்காட்சித் துறையில் வளர்ச்சி பெற்ற ஒரு நாடாகவே இந்தியா காணப்படுகிறது. பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும், அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. இதில், தொலைக்காட்சி ஊடகத்தின் நன்மை தீமை குறித்து கொஞ்சம் அலசுவோமா?

ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா. நாம் தகவல்களை அறிந்து கொள்கின்றோம், உலகில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்கின்றோம், கல்வி அறிவு, சமையல் அறிவு என புதிய விடயங்களை கற்றுக் கொள்கிறோம், மற்றும்,  மகிழ்ச்சிகரமாக பொழுதுபோக்குகளை கழித்தல், விளையாட்டு நிகழ்வுகளை கண்டு கழித்தல், இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்றுப் படங்கள், விஞ்ஞானப் படங்களின் வழி பொது அறிவை வளர்க்கிறோம், கல்வி, தொழில் நுட்பம், ஆன்மீகம், தகவல் தொடர்பு போன்ற நன்மைகளை பெறுகிறோம் என தொலைக்காட்சியின் நன்மைகளை அடுக்கிக்கொண்டேப் போகலாம். ஆனால் அதேவேளை, அவற்றுடன் நமது அணுகுமுறை எவ்வாறு அமையுமோ அதைப் பொறுத்தே அவை நன்மையா தீமையா என்பதை முடிவு செய்ய முடியும். ஏனெனில், தொலைக்காட்சியினால் எவ்வாறு நன்மைகள் கிடைக்கின்றனவோ அதேபோன்று தீமைகளும் அதிகமாகவே மக்களை வந்தடைகின்றன. உலகில் எந்தவொரு விடயமும் நன்மை-தீமை ஆகிய அம்சங்கள் கலந்தே இருக்கின்றன என்பது ஒரு பழைய பொன்மொழி.

இன்று பெரும்பாலான ஆண்களும் சரி, பெண்களும் சரி, குழந்தைகளும் சரி இந்த தொலைக்காட்சிக்கு அடிமையாகவே உள்ளனர். ஏனைய போதைப் பொருட்களைப் போன்று தொலைக்காட்சியும் ஒரு போதைப்பொருளாகி விட்டது. இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் புதைகுழியில் சிக்கிச் சிதைந்துவருகின்றன. சிறியவர் பெரியவர் வேறுபாடின்றி அனைவரும் அதன் முன்னால் தமது பொன்னான நேரத்தைக் காவு கொடுத்துவருகின்றனர். நிகழ்ச்சியின் நடுவில் யார் வந்தாலும் அவர்களைத் தொந்தரவாகவே பார்க்கின்ற மனோபாவம் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது நடைமுறையில் நாம் காணும் உண்மை. முக்கியமான நிகழ்ச்சி, அதிலும் குறிப்பாக தொலைக்காட்சித் தொடர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, உறவினர்களோ நண்பர்களோ வந்துவிட்டால் அவர்கள் வேண்டா விருந்தாளியாகவே வரவேற்கப்படுவதைக் காண்கின்றோம். தொலைக்காட்சியை அணைத்துவிடாமல் வந்தவர்களை உட்காரச் சொல்லி அவர்களிடம் கடனுக்காக ஓரிரு வார்த்தைகளைப் பேசிவிட்டு மறுபடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவதும் உண்டு. அடுத்தக்கட்ட விசாரிப்பு, விருந்தோம்பல் எல்லாம் அடுத்தடுத்த சிறிய விளம்பர இடைவேளைகளின்போதுதான்.

மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் நெடுந்தொடர்கள் இரவு 11 மணிவரையிலும் தொடர்ச்சியாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்களே அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். தென்னிந்தியர்களிலும் தமிழர்களே முன்னணியில் உள்ளனர். தமிழக மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஆறரை அத்தியாயங்களைப் பார்க்கின்றனர். இதுவே கேரளத்தில் நான்கு அத்தியாயங்களாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் கேரளம் கர்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிறது. அதிலும் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர். கண்டவரோடு காதல் வயப்படுவதையும் பெற்றோரை எதிர்த்து குடும்ப கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அந்நியரோடு ஓடிப்போவதையும் படிக்கும் பருவத்தில் காதல் வயப்படும் அவலங்களையும் நியாயப்படுத்துகின்றன.                     

நெடுந்தொடர்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமைக்கப்படுகிறது. பெண்மையின் பெருமையை விளக்க அல்ல, அவர்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்தத்தான். பொறாமையின் வடிவமாய் சில பெண்கள், கொடுமைக்காரிகளாய் சில பெண்கள், பழிக்குப் பழி வாங்கும் அரக்கிகளாய் சில பெண்கள், அரிவாளை ஏந்தி கொல்லத் துடிக்கும் தீவிரவாத உருவில் சில பெண்கள், திருமணமானவரோடு தொடர்பு போன்ற இழிவான முயற்சியில் சில பெண்கள், வஞ்சனை, சூது, துரோகம் போன்ற வக்கிர எண்ணங்களின் கோர வடிவமாய் சில பெண்கள், எப்போதுமே அழுது வடியும் சில பெண்கள் இப்படியாக நீளும் நெடுந்தொடர்களே அதிகம். அதிலும் மாமியார், மருமகள், நாத்தனார் இவர்களிடையே உறவுகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தியதில் இந்த நெடுந்தொடர்களுக்குப் பெரும் பங்குண்டு. மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் கொல்லத் திட்டமிடுவார்கள். இதில் நாத்தனார் மாமியாருக்கு உடந்தையாக இருப்பார். ஏன், மாமியாரைப் பெற்ற தாயாக மதிக்கின்ற மருமகள்களும், மருமகளைப் பெற்றெடுத்த பிள்ளையாகக் கருதும் மாமியார்களும் உலகத்தில் இல்லவே இல்லையா? பிறகேன் குடும்பச் சண்டையை மட்டுமே வளைத்து வளைத்துக் காட்ட வேண்டும்? இதைப் பெண்களே மெய்மறந்து பார்ப்பது வேதனையிலும் வேதனை.

ஒரு தொலைக்காட்சியில் எத்தனையோ சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் ஏறக்குறைய 90 விழுக்காட்டிற்கும் மேல் வணிக நோக்குடைய சேனல்கள்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஓர் அமெரிக்கக் குடிமகன் சராசரியாக தினந்தோறும் மூன்றேமுக்கால் மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார். ஒருவரின் அறுபத்தைந்து ஆண்டு கால ஆயுளில் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் தொலைக்காட்சிக்கு முன்னால் செலவிடுகிறார். இப்படி அவர் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக இருபது இலட்சம் விளம்பரங்களைக் காண நேர்கிறது. இதுவே மிதமிஞ்சிய நுகர்வுக் கலாச்சார அடிமைத்தனத்திற்குத் தங்களை ஆட்படுத்தியதாக அவர்களில் 82 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

சினிமாவில், தொலைக்காட்சியில் காட்டப்படும் அதிஉயர் ரகக் கனவு வாழ்க்கை நமக்கு நனவாகிவிடாதா என்ற விளிம்பு நிலை மக்களின் தேட்டமே வளரிளம் பருவத்தினரிடம் ஓடிப்போகும் கலாச்சாரத்திற்கும், அவர்களின் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போவதற்கும் காரணமாகிவிடுகிறது. மேலும் வன்முறை காட்சிகளை குழந்தைகள் பார்ப்பதிலிருந்து துவங்கி போதைப் பொருளுக்கு அடிமையாகுதல், போதைப்பொருள் பயன்பாடு, எதிர்மறையான எண்ணங்கள், சமூகத்திலிருந்து விலகி நடத்தல், மேலும், பாலியல் ரீதியான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதனாலும் சிறுவர்களின் உள்ளம் பாதிக்கப்படுவதனைக் காணலாம். வீட்டில் குழந்தைகள் இருக்கும் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பது கெடுதலே என்று அண்மையில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. நன்மைகளைவிட ஆபாசம், வன்முறை, கொலை, கொள்ளை, விபசாரம் போன்ற தீய செயல்களுக்கு வித்திடும் விடயங்களில்தான் தொலைக்காட்சித் தொடர்களும் நிகழ்ச்சிகளும் அதிகம் கவனம் செலுத்துகின்றன. நமது நேரத்தை தொலைக்காட்சி விழுங்கிவிடுகிறது, அறிவை மழுங்கடித்துவிடுகிறது. பண்பாடுகளையும் ஒழுக்க மாண்புகளையும் சிதைத்துவிடுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிகச் சில நிகழ்ச்சிகள் நீங்கலாக மற்ற நிகழ்ச்சிகள் யாவும் பெரும் சீரழிவை ஏற்படுத்துகின்றன.                                                             

செய்திகளை எடுத்துக்கொண்டோமானால், அதிலும்கூட, இயக்கம், கட்சி சார்பு செய்திகளேக் கிட்டுகின்றன. தங்களுக்கு இயைந்தாற்போல் செய்திகளை புனைந்துத் தருகின்றனர். தங்களுக்கு எதிராக இருப்பவைகளை அப்படியே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

எல்லாவற்றையும் ஒரு தராசில் இட்டுப்பார்த்தால் இன்றைய தொலைக்காட்சி,  நன்மைகளை விட தீமைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில், சுயநல இலாபங்கள் அதிகம் அதிகமாக புகுந்துவிட்டன. வியாபார நோக்கோடு பயன்மபடுத்தப்படும்போது, நன்மைகளைவிட தீமைகள் இடம்பெறுவது இயல்பே. ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளுடன் நமது அணுகுமுறை எவ்வாறு அமையுமோ அதைப் பொறுத்தே அவை நன்மையா தீமையா என்பதை முடிவு செய்ய முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2024, 15:42