வனுவாட்டுவில் நிலநடுக்கப் பாதிப்புகள் வனுவாட்டுவில் நிலநடுக்கப் பாதிப்புகள்   (ANSA)

வனுவாட்டுவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 குழந்தைகள் பாதிப்பு!

வனுவாட்டு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவுகள் முக்கிய சாலைகள் மற்றும் விமான நிலையம் மற்றும் முக்கிய துறைமுகத்தை இணைக்கும் பாலங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், பல பகுதிகளில் தொலைதொடர்பு வலையமைப்புகளையும் சீர்குலைந்துள்ளன : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வனுவாட்டுவில் டிசம்பர் 17, இச்செவ்வாயன்று இடம்பெற்ற, 7.3 அளவிலான அழிவுவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதன் பல பிந்தைய அதிர்வுகளால் பாதிக்கப்பட்ட 40,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

அந்நாட்டு அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இந்நிலநடுக்கத்தில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கூறும் அந்நிறுவனம், காயம்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தற்காலிகக் கூடாரங்களை அமைத்துள்ளது என்றும், தண்ணீர் வசதிகளை வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கிறது.

இத்தருணத்தில், அனைவருக்கும் அடிப்படை நல சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன, ஏனெனில் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்று கூறும் யுனிசெஃப் நிறுவனம், தீவின் முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவுகள் முக்கிய சாலைகள் மற்றும் விமான நிலையம் மற்றும் முக்கிய துறைமுகத்தை இணைக்கும் பாலங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன என்றும், பல பகுதிகளில் தொலைதொடர்பு வலையமைப்புகளைச் சீர்குலைந்துள்ளன என்றும் குறிப்பிடுகின்றது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பசிபிக் வனுவாட்டுவுக்கான யுனிசெஃப் அலுவலகத்தின் தலைவர் எரிக் துர்பைர் அவர்கள், இச்சூழலில் குழந்தைகளையும் அவர்தம் குடும்பத்தையும் அவசர உதவிகள் உடனடியாகச் சென்றடைய  முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டு அரசு, சமூக அமைப்புகள் மற்றும் பிற துணைவர்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தேவைகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, யுனிசெஃப் நிறுவனம் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் நீர்வழங்கல், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், பாதுகாப்பான நீர், நல வசதிகள், ஊட்டச்சத்து, நல சேவைகள், கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் அணுகலை வழங்குவதற்காகத் துணைவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தொடர்ந்து உதவியளித்து வருகிறது  என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் துர்பைர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2024, 12:38