சிரியாவில் குழந்தைகளுக்கு உதவும் யுனிசெப் அமைப்பு சிரியாவில் குழந்தைகளுக்கு உதவும் யுனிசெப் அமைப்பு  

உலகில் 15 கோடி குழந்தைகள், பிறக்கும்போது பதிவுசெய்யப்படுவதில்லை!

யுனிசெஃப் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் பாதையில் தனது 78-வது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், ஒவ்வொரு குழந்தையும், எல்லா இடங்களிலும், பிறக்கும்போதே பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான தீவிர முயற்சிகளுக்கு அழைப்பு விடுகிறது : யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும்போதே பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது உலகெங்கிலும் சட்டரீதியான அடையாளத்தை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் யுனிசெஃப் நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

டிசம்பர் 11, இப்புதனன்று, யுனிசெஃப் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதன் 78-வது ஆண்டை முன்னிட்டு, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், உலகில் 15 கோடி குழந்தைகள் பிறக்கும்போது பதிவுசெய்யப்படுவதில்லை என்றும், பதிவு செய்யப்படாத குழந்தைகளில் 50 விழுக்காடு சப்-சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது.

2019-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய அளவில் 75 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 77 விழுக்காடாக அதிகரித்துள்ள போதிலும், ஐந்து வயதுக்குட்பட்ட 15 கோடி குழந்தைகள், அல்லது 10-இல் 2 பேர், பதிவு செய்யப்படாதவர்களாகவும், அரசின் அமைப்புகளுக்குப் புலப்படாதவர்களாகவும் உள்ளனர் என்றும் கவலை தெரிவிக்கிறது.

மேலும் பிறப்பு பதிவு செய்யப்பட்ட 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பதையும் வெளிப்படுத்தும் இவ்வறிக்கை, இந்த இன்றியமையாத ஆவணம் பதிவுச் சான்றாகச் செயல்படுகிறது மற்றும் நாட்டின உரிமையைப்  பெறுவதற்கும், நாடற்ற நிலையைத் தடுப்பதற்கும், பிறப்பிலிருந்தே குழந்தைகள் தங்கள் உரிமைகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இது முக்கியமானதாகும் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், பிறப்புப் பதிவு, குழந்தைகள் உடனடியாக சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்கிறது என்றும், தீங்கு மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான அடிப்படையையும், தடுப்பூசிகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

இன்று, யுனிசெஃப் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் பாதையில் தனது 78-வது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், ஒவ்வொரு குழந்தையும், எல்லா இடங்களிலும், பிறக்கும்போதே பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான தீவிர முயற்சிகளுக்கு அழைப்பு விடுகிறது என்றும், ​​சட்டப்பூர்வ அடையாளத்தைப் பெறுவதில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் கொண்டாடி மகிழ்கின்றது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் Russell.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2024, 14:25