உடல் உள்ள நலன் தரும் தியானம் உடல் உள்ள நலன் தரும் தியானம் 

வாரம் ஓர் அலசல் – ஜன.3. உடல்-உள்ள ஆரோக்கிய தினம்

நம் உடலை குணப்படுத்துவதில் மனதின் பங்கு குறிப்பிடும்படியானது. மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்து மனித குலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தெரிந்தே வைத்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உடல்-உள்ள ஆரோக்கிய தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 3ஆம் தேதி சிறப்பிக்கின்றோம். மனநலமும் உடல்நலத்தைப் போலவே முக்கியமானதுதான். மனநலத்துக்கும், உடல்நலத்துக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.

மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும். மன நலம் சரியாக இருந்தால், உணர்வுகள் நலமாக இருந்தால், நிச்சயம் நம் உடல் நலனும் சீராக இருக்கும்.

உடலும் மனமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. நேர்மறையான மனம் உடல் நலத்திற்கு சிறப்புப் பங்காற்றுகிறது. நல்ல உடல் நலம் நேர்மறை மனதிற்கு வழிவகுக்கிறது.

மனத்தளர்வு, பதட்டம் போன்றவை இதய நோய்க்கு வழிவகுக்கின்றன. மனநலம் பாதிக்கப்படும்போது, தலைவலி, உடல் சோர்வு, அஜீரணக்கோளாறு, தூக்கமின்மை, பதட்டம், எதிலும் கவனம் செலுத்தமுடியாமை போன்றவை இடம்பெறுகின்றன. மனச்சோர்வு என்பது நம் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. ஏனெனில் நம் மனது சொல்வதையெல்லாம் நம் உடல் தனக்குத்தானே எழுதி வைத்துக்கொள்கின்றது. ஆகவே நேர்மறை எண்ணங்களுடன் வாழவேண்டியது நம் அத்தியாவசியத் தேவை.

பலருக்கு பதட்டம் வந்தாலேயே அதனோடு இணைந்த இலவச இணைப்பாக ஒற்றைத் தலைவலியும் வந்துவிடுகிறது. மன அழுத்தம் ஏற்படும்போது பலருக்கு மலச்சிக்கல்கூட வருவதுண்டாம். மன அழுத்தம் மற்றும் பதட்ட நிலைகள் தொற்றும்போது பலருக்கு ஒவ்வாமை நோய்கள் வருகின்றன. இரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பதும் இடம்பெறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதய நோய்க்கும் இது வழிவகுக்கிறது. பொதுவாக நாம் பதட்டமாக இருக்கும்போது வயிற்றை பிசைவது போன்ற உணர்வு ஏற்படும். இது நம் மனமும், உடலும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான சிறு உதாரணம் மட்டுமே. ஆனால் அதைவிட தீவிரமாக, நாள்பட்ட மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் உண்மையில் செரிமான மண்டலத்தின் உடலியலை மாற்றி, அது செயல்படும் விதத்தைப் பாதிக்கிறது. மேலும் சில வேளைகளில் வலி மற்றும் அசௌகரியத்தை தீவிரப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. தூக்க சிக்கல்கள் மற்றும் ஆற்றல் இழப்பு, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, நீடித்த சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை போன்ற உணர்வுகளைத் தூண்டுவது மட்டுமல்லாமல், நாம் தூங்கும் முறையையும், தூங்கும் தன்மையையும் பாதிக்கலாம். தூக்கமின்மையால், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகள் அதிகரிக்கலாம். இறுதியில், இது தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் கோளாறுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது,​​​​ உங்கள் உடல் கார்டிசோல் ஹார்மோனை வெளியிடுகிறது, இதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. நீண்ட கால மன அழுத்தம் அல்லது நாள்பட்ட மனச்சோர்வு, பதட்டம் ஆகியவை இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம், ஆயுட்காலத்தைப் பாதிக்கலாம். மன ஆரோக்கியம் முழு உடலிலும் ஒரு விரிவான தாக்கத்தை ஏற்படுத்துவதால், கடுமையான மற்றும் நாள்பட்ட மனநலப் பிரச்சினைகள் உண்மையில் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் மன ஆரோக்கிய குறைபாடு நோயெதிர்ப்பு சக்தி முதல் உடலின் குணமடையும் தன்மை வரை அனைத்தையும் பாதிக்கிறது.

பலர் மனதில் இப்போது ஒரு நியாயமான கேள்வி தோன்றலாம். நம் மனதால் உடலை குணப்படுத்தமுடியுமா? முடியும்தான். நம் உடலை குணப்படுத்துவதில் மனதின் பங்கு குறிப்பிடும்படியானது. மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்து மனித குலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தெரிந்தே வைத்துள்ளது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் கடந்த 300 ஆண்டுகளாகத்தான் உடலையும் மனதையும் பிரித்து தனித்தனியாக மருத்துவம் பார்க்கத் துவங்கியுள்ளது மருத்துவ உலகம். அதுவரையில் இரண்டிற்கும் ஒரே சிகிச்சைதான் வழங்கப்பட்டு வந்தது. 17ஆம் நூற்றாண்டில்தான் மனதையும் உடலையும் பிரித்துப் பார்க்கும் போக்கு துவங்கியது.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொரு மனிதரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தாலே மனநலம் சார்ந்த பாதிப்புகளை, பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஏனென்றால், உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல் மனதில் கவலை, சோர்வு ஏற்படுவதையும் தடுக்கிறது. அனைவரும், உடற்பயிற்சியைத்தான் முதன்மை தீர்வாக காட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக யோகாப் பயிற்சியை. உடலையும் மனதையும் இணைத்து மனிதனுக்கு சுறுசுறுப்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றது யோகா. அடுத்து தியானம் செய்வதை முன்வைக்கிறார்கள். உள்மனதோடு உரையாடச் சொல்கிறார்கள். தீர்ப்பு எழுதாமலேயே நம் எண்ணங்களை உற்று நோக்கச் சொல்கின்றார்கள். மூன்றாவதாக அவர்கள் அறிவுறுத்துவது, அவசரமில்லாத நடைப்பயிற்சி. இயற்கையை இரசித்துக்கொண்டே நடைபயிலுங்கள். சுத்தமான காற்று உங்கள் உடலையும் மனதையும், உணர்வுகளையும் புதுப்பிக்கும்.

இது தவிர, ஏதாவது எழுதத் துவங்குங்கள். உங்கள் அனுபவங்களைக்கூட பகிரலாம். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, பிறருக்கும் உதவுகிறது. உங்கள் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர அது உதவும். நிறைய நீர் அருந்துங்கள். ஒருவன் தன் உடலுக்கு செய்யக்கூடிய உன்னதமான உதவி அது. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். தூக்கத்தை தவிர்க்காதீர்கள். எட்டு மணி நேரம் தூங்குவது நல்ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பொழுதுபோக்கிற்கென நேரத்தை ஒதுக்குங்கள். நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் நேரத்தைச் செலவிட மறந்துவிடாதீர்கள்.  உங்கள் நலத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு.

நம் வாழ்வின் நேர்மறையான கூறுகளில் கவனம் செலுத்தினால், அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கலாம். நேர்மறையாக இருக்க முயற்சி செய்வோம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்போம், மாற்றங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள நம்மையே தயாரித்துக் கொள்வோம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்போம், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் மனநிலையை உயர்த்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

”நாளை என்பது நிச்சயமில்லை. நேற்று என்பது முடிந்துபோன பொய், இன்று என்பதே உண்மை” என இப்படி மூன்றையும் கடைபிடித்தாலே வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனையை சரி செய்து விடலாம். அடுத்த நாளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் நேற்றைய நாளை எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நேர்மறையாக இருப்போம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்போம். மற்றவர்களுடன் இணைக்கமாகச் செல்வோம். நமக்காக வாழவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கைக் கொண்டு முன்னோக்கி நடைபோடுவோம். நம்பிக்கையே நலமளிக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2024, 11:38