காசா குழந்தைகள் காசா குழந்தைகள்  

புத்தாண்டின் முதல் வாரத்தில் காசாவில் 74 குழந்தைகள் மரணம்!

காசாவின் குழந்தைகளுக்கு, புத்தாண்டில் நிகழ்ந்த தாக்குதல்கள், பற்றாக்குறை மற்றும் கடுங்குளிர் காரணமாக அதிக இறப்பு மற்றும் துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது : யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.

ஜனவரி 8, இப்புதனன்று, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், காசா நகரம், கான் யூனிஸ். தெற்கில் அல் மவாசி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரவு நேரத் தாக்குதல்கள் உட்பட பல சம்பவங்களில் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மிக அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில், அதாவது, இச்செவ்வாயன்று, அல் மவாசியில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

கடுமையான குளிர்காலம் மற்றும் போதிய தங்குமிடங்கள் இல்லாததால், டிசம்பர் 26 முதல், எட்டு பிறந்த குழந்தைகள் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துள்ளன என்றும் குறிப்பிடும் அதன் அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2025, 14:07