பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடிய அருள்பணி ஸ்டான் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடிய அருள்பணி ஸ்டான் சுவாமி 

விடை தேடும் வினாக்கள் – இருளின் துணையுடன் வருவது ஏன்?

மக்களுக்குப் பணியாற்றுவதாக மேடைகளில் முழங்கி ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், தீய சக்திகளுடன் கரம்கோர்த்து மக்களை நசுக்குவது, உலகெங்கும் நிகழ்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, கடந்தவாரம் தன் சீடர்களுள் ஒருவராகிய யூதாஸை நோக்கி இயேசு, மானிட மகனை முத்தமிட்டா காட்டிக்கொடுக்கிறாய்? எனற கேள்வியைக்கேட்டது குறித்து கண்டோம். அதே நிகழ்ச்சியில் தொடர்ந்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்?” என தன்னைப் பிடிக்க வந்த கூட்டத்தைப் பார்த்து இயேசு கேட்பது குறித்து இன்று காண்போம். மேலும் தொடர்ச்சியாக இயேசு, “நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன” என்கிறார் (மத் 26 55,56). 

இங்கு ஆள்வோரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக, வாள்களோடும் தடிகளோடும், ஒரு திருடனைப் பிடிக்க வருவதுபோல், இருளின் துணைகொண்டு வருகின்றது குருக்களும் மக்கள் மூப்பர்களும் அனுப்பிய ஒரு கூட்டம். இவர்கள் நேரடியாக மோத வராமல் ஒரு துரோகத்தின் துணை நாடி கைது செய்ய வருகின்றனர். கோவிலில் போதித்தபோது பகலில் கைது செய்ய பயந்தவர்கள் இப்போது, இருட்டின் மறைவில் ஒளியை மறைக்க வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கும்போது, வரலாற்றில் அண்மையில், அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி இயல்பாகவே நம் கண்முன் வருகிறது. 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டார். வயதில் மிக முதிர்ந்த ஒருவரை சிறையில் அடைத்த அவலத்தை இந்திய நடுவண் அரசு, முதல்முறையாக நடத்திக் காட்டியது. அதுவும், ‘பார்கின்சன்ஸ்’ எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய், இதயம் தொடர்பான குறைபாடுகள் உட்பட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுள்ள அவரை, கோவிட் தொற்றுநோய் தீவிரமாக இருந்த காலத்தில், இராஞ்சியிலிருந்து மும்பைக்கு இழுத்துச்சென்று அங்கு சிறையில் அடைத்தது, மனிதாபிமானமற்ற கொடுமை. இது, இந்திய நடுவண் அரசு தனக்குத்தானே சூட்டிக்கொண்ட கேவலமான ஒரு மகுடம்.

இன்று நாம் நோக்கவுள்ள விவிலியப்பகுதியில், அக்காலத்தில் இயேசுவுக்கு நிகழ்ந்ததுபோலவே, இக்காலத்தில் அவரது பணியாளர் ஒருவருக்கு நிகழ்ந்தது. நடைபெற்ற விசாரணைகள் அனைத்திலும், அருள்பணி ஸ்டான் அவர்கள்மீது எவ்வித குற்றத்தையும் சுமத்தமுடியா நிலையில், விசாரணை என்ற பெயரில் அவரது கணணியைப் பறித்த NIA அமைப்பு, தீவிரவாதக் குழுக்களைப் பற்றிய தகவல்களை, அருள்பணி ஸ்டான் அவர்களுக்குத் தெரியாமல், அந்தக் கணணிக்குள் புகுத்தியது. மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதென்றும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற Bhima-Koregaon வன்முறைகளைத் தூண்டிவிட்டதில் அவருக்கு தொடர்பு உண்டென்றும், அவர்மீது பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இத்தனைக் கீழ்த்தரமான அரசியல் வேட்டைக்கு பலியாகும்வண்ணம், அருள்பணி ஸ்டான் அவர்கள் செய்தது என்ன? ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கென அவர் 50 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் பாடுபட்டு, எழுதப்படிக்கத் தெரியாத அந்த அப்பாவி மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்திவந்ததே அவரின் குற்றம்.

ஒரு பத்து ஆண்டுகளாக, இந்திய நடுவண் அரசும், 'கார்ப்பரேட்' (Corporate) என்று சொல்லப்படும் பெருநிறுவனங்களும் இணைந்து, பழங்குடியினரின் உரிமைச்சொத்தான நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு, அந்த நிலங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து வருகின்றன. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களை, குறிப்பாக இளையோரை ஒருங்கிணைத்து, சட்டப்படி அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து விழிப்புணர்வையும், அந்த உரிமைகளைக் கோரி போராடும் வழிமுறைகளையும், அருள்பணி ஸ்டான் அவர்கள் வழங்கிவந்தார்.

ஆயிரக்கணக்கான பழங்குடியின இளைஞர்கள், தம் உரிமைகளுக்காகப் போராடிய வேளையில், அவர்களை 'நக்சலைட்டுகள்' என்று முத்திரை குத்தி, எவ்வித வழக்கும் இன்றி, அவர்களை சிறையில் அடைத்தனர், காவல் துறையினர். வறுமைப்பிடியில் சிக்கித் தவித்த அவ்விளையோர், வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அருள்பணி ஸ்டான் அவர்கள், அநியாயமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வழக்கின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள், உலகின் பல பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அரசு, அருள்பணியாளரைப் பழிவாங்கத் துடித்தது. அதற்கேற்றாற்போல் Bhima-Koregaon வழக்கில் அவரைத் தொடர்புபடுத்தி, தன் பழியைத் தீர்த்துக்கொண்டது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இரவில், அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு, கைது செய்வதற்கான எந்த ஆணையும் இன்றி சென்ற NIA அமைப்பு, அவரை இரவோடிரவாக இழுத்துச் சென்றது. வயதில் முதிர்ந்த ஓர் அருள்பணியாளரை, ஒரு தீவிரவாதியைப்போல, இரவோடிரவாக கைது செய்திருப்பது, நம் நினைவுகளை கெத்சமனி தோட்டத்திற்கு இட்டுச் செல்கின்றது. அங்கு, இரவில் செபித்துக்கொண்டிருந்த இயேசுவைப் பிடிக்கச்சென்ற கூட்டத்தினரிடம், அவர், "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது" (லூக்கா 22:52-53) என்று கூறிய சொற்கள், நம் உள்ளங்களில் எதிரொலிக்கின்றன.

பன்னாட்டு வர்த்தகப் பேராசையினால் ஒவ்வொரு நாளும் சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி பழங்குடியினரிடையே உழைத்துவந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், இறுதியில் தானே சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்துவின் உண்மையான சீடராக உயிர்துறந்தார் என்றும், காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப் பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர் என்றும் மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், தன் அறிக்கையில் எடுத்துரைத்தது எத்துணை உண்மை.

மக்களுக்குப் பணியாற்றுவதாக மேடைகளில் முழங்கி வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், மக்களை வதைக்கும் தீய சக்திகளுடன் கரம்கோர்த்து மக்களை நசுக்குவது, உலகெங்கும் நிகழ்கிறது. இத்தகைய போலியான மக்கள் பணியாளர்கள், அருள்பணி ஸ்டான் போன்ற உண்மையான மக்கள் பணியாளர்களைச் சந்திக்கும் வேளையில், தங்கள் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சத்தில், உண்மைப் பணியாளர்களை இவ்வுலகினின்றே அகற்றிவிடுவதை நாம் மீண்டும், மீண்டும் கண்டுவருகிறோம். இது இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் தொடர்கதையாகி வருகின்றது. அன்று மூப்பர்களும், குருக்களும், இன்று அரசியல்வாதிகள்.

இப்போது நமக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகின்றது. ஸ்டான் சுவாமி போன்ற நல்லவர்களுக்கு துன்பம் வருவது ஏன்?

சீனாவில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் பூகம்பம் வந்து ஆயிரக்கணக்கானோர் பலியாயினர், மற்றும் அப்பாவிகள் பலரை ஊனமாக்கியது இது என செய்திகளில் வாசிக்கிறோம். புயலால் மியான்மரிலும் இது நடந்தது. ஆப்ரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும் வெள்ளப்பெருக்கால் அவ்வப்போது நடை பெறுவதைக் குறித்து வாசிக்கிறோம். இப்போது வயநாடு நிலச்சரிவில் எத்தனை உயிரிழப்புக்கள். தப்பித்தவர்கள் வீடிழந்து, பொருளிழந்து, உறவிழந்து பெரும் துயரில் வாடுகின்றனர். அப்படி இறந்துபோக அந்த அப்பாவிகள் செய்த குற்றம் தான் என்ன?

இது மட்டுமா, தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் பதற வைக்கும் விபத்துகள் ஏராளம். நல்லவர், தர்மநெறி பிறழாத வாழ்க்கை நடத்துபவர் திடீரென தீராத நோயில் படுத்துவிடுகிறார், குடும்பமே நிலைகுலைந்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? நாணயஸ்தர் என்று பெயரெடுத்த வியாபாரி ஏமாற்றப்பட்டு திடீரென்று ஏழையாகிறார், கடன் சுமையால் அவமானப்பட்டுத் தற்கொலையே செய்து கொள்கிறார். செய்யாத குற்றங்களுக்குப் பழிச்சொல் ஏற்றுத் தண்டனைக்கு உள்ளாகும் நல்லவர் பலர்.

மகன் வெளிநாடு சென்று படிப்பதற்காகச் சொத்துக்களை விற்று அனுப்பிய பெற்றோர் முதிய வயதில் வெறுமையிலும் தனிமையிலும்!

கர்ப்பத்திலேயே குறையுள்ள குழந்தைகளைப் பெற்ற நல்ல பெற்றோரின் எண்ணிக்கை எத்தனை எத்தனை?

குழந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்த்து, வாலிபத்தில் அவனை விபத்தில் பறி கொடுத்து, முதுமைக் காலத்தில் நடைப்பிணமாகத் தவிக்கும் பெற்றோரின் மனச்சுமைகள்தாம் எத்தனை?

இலஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரிக்கோ பிழைக்கத் தெரியாதவர் என்று பட்டம்! அவரது நேர்மைக்குத்தான் மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் எத்தனை விதமான தொல்லைகள்!

இப்படி நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் பட்டியலிட முடியாது. இவை நாமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பமல்ல. தாமாக, தடுக்க இயலாத நிலையில், நியாயப்படுத்த முடியாதவைகளாக வருபவை.

இப்படியான துன்பங்களைக் காணும்போது ‘நல்லவர்களுக்கு ஏன் அதிக துன்பம் வருகிறது?’ என்ற கேள்வி நமக்குள் பிறப்பது இயல்பே. இக்கேள்வி இன்று நேற்று எழுந்த கேள்வி அல்ல. காலம் காலமாக விடைதேடி நிற்கும் ஒரு மர்மக் கேள்வி இது.

நெருப்பில் இட்ட தங்கம்தான் சுடர்விடும், துன்பத்தில் புடமிடப்பட்ட மனிதன் தான் இறைவனுக்கு ஏற்றவனாகிறான் என நமக்கு நாமே விடை சொல்லித் தேற்றிக்கொள்கிறோம்.

துவக்க காலத்தில் பல துன்பங்களை அனுபவித்த சுவாமி விவேகானந்தர், பிற்காலத்தில் ஒரு முறை, ‘நரகத்தின் வாயிலாகச் சொர்க்கத்துக்குச் செல்வதே எப்போதும் வழி’ என்றார். ‘நரகம் வழியே’ என்று, துன்பத்தை ஏற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு அதைக் கடப்பதைத்தான் விவேகானந்தர் கூறுகிறார். அதனால் அவர் எந்தக் கஷ்டத்திற்கும் அடிபணியாமல் அவற்றைச் சந்தித்தார்; பின் அவற்றைக் கடந்தும் போனார். அப்படிக் கடக்கும்போது துன்பங்களே அவரைத் தூக்கிவிட்டன என்பதெல்லாம் அவரது வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இதன் வழி, கஷ்டங்களை அனுபவிக்கும் போதும் நல்லவர்கள் உயர் குணங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்பதை விவேகானந்தர் உலகுக்கு எடுத்துக் காட்டினார். தனது அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டபோதும், அதைக்குறித்து குறைகூறிக்கொண்டு இருக்காமல், ஏனைய கைதிகளுடன் இயல்பாகப் பழகி தன் சிறைவாழ்வைத் தொடர்ந்த ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்வும் நமக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. விடுதலைத் தர வந்த இயேசுவை திருடனைப்போல் சிறைப்பிடித்தது இந்த உலகம். இருப்பினும் அவரின் விடுதலைப் பயணம் முடங்கவில்லை. இதைத்தான் இன்றைய நிகழ்ச்சி நமக்குச் சொல்லித் தருகிறது. அத்தனை பொய்க்குற்றச்சாட்டுகளையும், தடைகளையும், பிறரின் தப்பெண்ணங்களையும் தாண்டி நாம் சென்றுகொண்டேயிருப்போம். தன் தலைவன் காட்டிய வழியில் நடந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கரம்பிடித்து உறுதியுடன் நம் வாழ்வில் நடைபோடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2024, 11:11