László Papp தேசிய விளையாட்டரங்கத்தில் திருத்தந்தை

ஏப்ரல் 29 சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3.50 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 8.4 கிமீ காரில் பயணம் செய்து László Papp என்னும் புடாபெஸ்டில் உள்ள தேசிய விளையாட்டரங்கத்தை நோக்கிச் சென்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 29 சனிக்கிழமை 411 ஆவது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளில் காலை பார்வையற்றோர் மற்றும் குறைபாடுடைய குழந்தைகளை சந்தித்தல்,  புனித எலிசபெத் அன்னை ஆலயத்தில் குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளைச்  சந்தித்தல், இறையன்னைப் பாதுகாவலி கிரேக்க கத்தோலிக்க ஆலயம் சந்தித்தல் போன்றவைகளை காலையில் முடித்த திருத்தந்தை மாலையில் ஹங்கேரியின் தேசிய விளையாட்டரங்கத்தில் இளையோரைச் சந்தித்து உரையாற்றினார். 


ஏப்ரல் 29 சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3.50 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 8.4 கிமீ காரில் பயணம் செய்து László Papp என்னும் புடாபெஸ்டில் உள்ள தேசிய விளையாட்டரங்கத்தை நோக்கிச் சென்றார்.    

உள்புற விளையாட்டரங்கத்தில் திருத்தந்தை
உள்புற விளையாட்டரங்கத்தில் திருத்தந்தை

László Papp தேசிய விளையாட்டரங்கம்

புடாபெஸ்டில் அமைந்துள்ள மிகப்பெரிய பிரம்மாண்டமான உள்புற விளையாட்டரங்கம் தலைநகரின் 14ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 12,500 பேர் அமரும் அளவிற்கு பெரிய இடப்பரப்பைக் கொண்ட இவ்விளையாட்டரங்கமானது, விளையாட்டு மட்டுமல்லாது கலாச்சாரம் மற்றும் கல்வியியல் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெறும் இடமாகவும் சிறப்புற்றுத் திகழ்கின்றது. 25000 சதுர மீட்ட பரப்பளவுடைய இவ்விளையாட்டரங்கமானது தொடக்கத்தில் Budapest Sport Hall, என்று அழைக்கப்பட்டு வந்தது. அதன்பின் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றிலும் சேதமடைந்து 2001 ஆம் ஆண்டு இப்போதுள்ள இடத்தில் விளையாட்டரங்கம் கட்டத்தொடங்கப்பட்டது. ஹங்கேரியின் Közti கட்டிடக்கலை நிறுவனம் மற்றும் ஆங்கிலோ அமெரிக்கன் பாடத்துறை  என்பவற்றின் துணையுடன் 2003 ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது. 50000 டன் சிமெண்ட் கலவைகள், 2,300 எஃகு கம்பிகள், 1,10,00,000 போல்ட் என்னும் இணைப்பான்கள் மற்றும் பல கிமீ தூரம் வரையிலான இணைப்புக்கம்பிகள் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. தோராயமாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களின் எடை 2,00,000 டன்கள் என்று கருதப்படுகின்றது.  2004 மே 28 ஆம் நாள் முதல் ஹங்கேரியின் மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த குத்துச்சண்டை வீரரான László Papp என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் 29 சனிக்கிழமை மாலை 4.10 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 7.40 மணிக்கு László Papp  தேசிய விளையாட்டரங்கத்தை வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த இளையோரை வாகனத்தில் வலம் வந்தபடி சந்தித்து மகிழ்ந்தார். ஹங்கேரி இளையோர் மிகுந்த ஆரவாரத்துடன் பாடல்கள் பாடி திருத்தந்தையை வரவேற்று மகிழ்ந்தனர். மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கூட்டமானது ஹங்கேரி இளையோர் மேய்ப்புப்பணிக்கு பொறுப்பாளரான ஆயரின் வரவேற்புடன் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாரம்பரிய நடனமும், கத்தோலிக்க ஆண் பெண் இளையோர்,  கிரேக்க கத்தோலிக்க இளைஞன், பல்கலைக்கழக மாணவி ஆகியோர்  தங்களது சான்று வாழ்வினைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதன்பின் பாடப்பட்ட பாடல்களைத் தொடர்ந்து திருத்தந்தை கூடியிருந்த இளையோருக்குத் தனது உரையினை ஆற்றத் தொடங்கினார்.  தனது உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த இளையோருக்கு தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

ஹங்கேரி உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு 8.4 கிமீ பயணம் செய்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மாலை 6.00 மணிக்கு ஹங்கேரியின் இயேசு சபை அருள்பணியாளார்களை திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இரவு உணவினை உண்டு நித்திரைக்குச் சென்றார்.

இயேசு சபை அருள்பணியாளார்களுடன் திருத்தந்தை
இயேசு சபை அருள்பணியாளார்களுடன் திருத்தந்தை

ஹங்கேரியின் புனித எலிசபெத் அன்னை ஆலயத்தில் குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளைச்  சந்தித்து அவர்களுக்கு தன் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் உரையையும் மாலையில் László Papp தேசிய விளையாட்டரங்கத்தில் ஹங்கேரியின் இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு தனது நான்காவது உரையையும் ஆற்றி தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2023, 11:35