தேடுதல்

நமக்குதவும் அன்னை மரியாவின் இரண்டு அணுகுமுறைகள்

அன்னை மரியாவைப்போல் இறைவனின் செயல்பாடுகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாக நம் தினசரி வாழ்விலும், ஆன்மீகப் பயணத்திலும் செயல்பட அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்னை மரியா தான் பெற்ற தனிப்பெரும் கொடையை எவ்வாறு பாதுகாத்து வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள அன்னை மரியாவின் இரண்டு அணுகுமுறைகள் நமக்கு உதவுகின்றன என, டிசம்பர் 8ஆம் தேதி, அமலஉற்பவ அன்னையின் திருவிழாவன்று நண்பகல் மூவேளை செபவுரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமல உற்பவ அன்னை பெருவிழாவையொட்டி வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழா நற்செய்தி நமக்கு இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு குறித்து எடுத்துரைக்கிறது என, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி தன் மூவேளை செபவுரையைத் துவக்கி, பாவம் அறவேயற்ற இதயத்தைக் கொண்ட அன்னைமரியா, தான் பெற்ற தனிப்பெரும் கொடையைக் காப்பதில் தேர்ந்துகொண்ட இரு அணுகுமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என வானதூதர் மரியாவை நோக்கிக் கூறியதும், இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார் என்ற திருத்தந்தை, இத்தகைய ஆச்சரியமும் மனக்கலக்கமும் அவரின் முதல் அணுமுகுறை என சுட்டிக்காட்டினார்.

இறைவனின் கொடைகள் குறித்து வியந்து அதன் மதிப்பைப் பாராட்டி, அக்கொடைகளோடு இணைந்துவரும் நம்பிக்கை மற்றும் கனிவு குறித்து மகிழ்ந்து ஏற்பதே அன்னைமரியாவைப்போல் நம் அணுகுமுறையாக இருக்கவேண்டும் என எடுத்துரைத்தார் திருத்தந்தை

இந்த முதல் அணுகுமுறையின் பகுதியாக, நம் கொடைகள் குறித்த வியப்பை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இறைவார்த்தைகள் குறித்த நம் வியப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இரண்டாவது அணுகுமுறையாக, சிறு விடயங்களிலும் நம்பிக்கைக் கொண்டிருத்தல் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவயதிலேயே மிகவும் எளிமையானவராக இருந்து, தன் இதயத்தை எப்போதும் தூயதானதாக வைத்திருந்த அன்னை மரியா, இறைவனின் அருளால் கருத்தாங்கினார் என்பதை எடுத்துரைத்தார்.

இறைவார்த்தையைக் கேட்டு அதனை தியானித்து, தாராளமனதுடன் இறைவனுக்காக எதற்கும் தயார் நிலையிலும் செயல்பட்ட அன்னை மரியா, நன்மைத்தனத்தில் தினசரி நம்பிக்கைக் கொண்டவராக கடவுளின் கொடை தனக்குள் வளர அனுமதியளித்தார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவைப்போல் நாமும் இறைவனின் செயல்பாடுகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாக நம் தினசரி வாழ்விலும், நம் ஆன்மீகப் பயணத்திலும் செயல்படுகிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயேக் கேட்டு, இறைவனின் பிரசன்னத்தை நமக்குள் வரவேற்க உதவும் நற்செய்தியை வாசித்தல், செபித்தல், திருப்பலியில் பங்குகொள்ளல், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுதல், நற்செயல்களைப் புரிதல் போன்றவைகளில் ஈடுபடுகிறோமா என்று சுயசோதனைச் செய்துகொள்வோம்  எனவும் மக்களை நோக்கி கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் கொடைகள் குறித்து வியப்படைந்தவர்களாக, நம்பிக்கையுடன்கூடிய தாராளமனத்துடன் பதலளிக்க அமல உற்பவ அன்னை நமக்கு உதவுவாராக என தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2023, 12:47

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >