தன்னைப் பார்க்க, தன் குரலுக்கு செவிசாய்க்க வைத்த பர்த்திமேயு
மெரினா ராஜ் – வத்திக்கான்
பார்வையற்றவரான பர்த்திமேயு கேட்கும் திறன் கொண்டவராக இருந்ததோடு தனது குரலினை பிறரைக் கேட்க வைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார் என்றும், இயேசுவைப் பார்த்து தாவீதின் மகனே என் மேல் இரக்கமாயிரும் என்று உரக்கக்கத்தி இயேசு தன்னை பார்க்கவும், தனது குரலுக்கு செவிசாய்க்கவும் வைத்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுக்காலத்தின் 30 ஆம் வார ஞாயிறு நற்செய்தி வாசகமான பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் பகுதி குறித்த கருத்துக்களையும் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.
பார்வையற்ற பர்த்திமேயுவின் கூக்குரல் ஒர் உதவிக்கான வேண்டுகோள் மட்டுமல்ல, மாறாக, தன்னைப்பற்றிய ஓர் உறுதிப்பாடு என்றும், தன்னைக் கூர்ந்து பார்த்து உற்றுநோக்கிய இயேசுவால், குணம்பெற்ற பர்த்திமேயு, அவரைப் பின்தொடர்ந்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பர்த்திமேயுவின் கூக்குரல், நம்பிக்கை, பயணம் என்னும் மூன்று தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பார்வையற்றவரும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருமான பர்த்திமேயுவை மக்கள் கூட்டம் விலக்குகின்றது, நிராகரிக்கின்றது என்றும், யாரும் அவரை குணமளிக்கும் பார்வையுடனும் இரக்கத்துடனும் பார்க்கவில்லை என்றும் எடுத்துரைத்தார்.
உரக்கக் கத்துதல் (கூக்குரல்)
பர்த்திமேயு உரக்கக் கத்தியது தனது உதவிக்கான வேண்டுகோளை விடுப்பதற்காக மட்டுமல்ல, மாறாக தன்னைப் பற்றிய ஓர் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பர்த்திமேயு, இயேசுவே நீர் என்னைக் காண்கின்றீரா? என்னால் உம்மைக் காண இயலவில்லை என்று உரத்தகுரல் வழியாக எடுத்துரைத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பார்வையற்றவரைக் கண்ட இயேசு உடலாலும் உள்ளத்தாலும் அவரின் குரலுக்கு செவிமடுத்தார் என்று கூறிய திருத்தந்தை, தெருவில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை விலக்குகின்றோமா நிராகரிக்கின்றோமா? அவர்களது குரலுக்கு செவிசாய்க்கின்றோமா என்று சிந்திக்கவும் அழைப்புவிடுத்தார்.
பர்த்திமேயுவின் நம்பிக்கை
உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளால் பர்த்திமேயு குணமாகின்றார், ஏனெனில் அவர் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தன்னை எப்படி பர்த்திமேயு காண்கின்றார் என்பதை இயேசு அவரது செயலில் கண்டார் என்றும் எடுத்துரைத்து நாம் எப்படி ஏழைகளைப் பார்க்கின்றோம் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஏழைகளுக்கு உதவும்போது அவர்களது கண்களைக் காண்கின்றோமா? அவர்களைத் தொடுகின்றோமா என்று கேள்வி எழுப்பிய திருத்தந்தை அவர்கள், அத்தகைய மக்களின் கேள்விகளையும் உதவிக்காக அவர்கள் எழுப்பும் கூக்குரல்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.
பர்த்திமேயுவின் பயணம்
இயேசுவால் குணமடைந்து பார்வைபெற்ற பர்த்திமேயு இயேசுவைப் பின்தொடர்ந்தார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உள்ளத்தளவில் பார்வையற்றவர்களாக இருக்கும் நாம், இயேசுவை அணுகியவுடன் அவரைப் பின்தொடர்கின்றோமா என்றும், ஏழைகளுடன் நெருக்கமாக இருக்கும்போது இயேசுவுடனே நாம் நெருக்கமாக இருக்கின்றோம் என்று உணரவும் வலியுறுத்தினார்.
பிறருக்கு பிச்சையிடுபவர்கள் இறைவனின் அருளை அபரிமிதமாகப் பெற்றுக்கொள்கின்றார்கள், ஏனெனில் அத்தகையவர்கள் இறைவனின் கண்களால் பார்க்கப்படுகின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மீட்பின் விடியலாகிய அன்னை மரியாவிடம் கிறிஸ்துவின் ஒளியின் பாதையில் நம்மை வழிநடத்த அருள்வேண்டி ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்