தேடுதல்

இறைவார்த்தையை முழுமையாக ஏற்றவர் அன்னை மரியா

லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வினை நாம் வாசிக்கும்போது அது நமக்கு நல்ல பலனைத் தரும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

சாதாரண சிறிய புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்ணான மரியா இறைத்திருவுளத்திற்கு ஆம் என்று பணிந்ததால் வரலாற்றின் மையத்திற்கு அழைக்கப்படுகின்றார் என்றும், அருள் நிறைந்த மரியே என்று கபிரியேல்  வானதூதர் அழைப்பதற்கு ஏற்றவாறு கடவுள் பணிக்காக இறைவார்த்தையை முழுமையாக ஏற்றவர் மரியா என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை அன்னை மரியின் அமல உற்பவ பெருவிழாவன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு என்ற லூக்கா நற்செய்தியின் பகுதி குறித்த விளக்கத்தினைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை அவர்கள், எல்லாம் வல்ல உன்னத இறைவன் வானதூதர் வழியாக எளிய ஒரு பெண்ணுடன் உரையாடி மீட்பின் திட்டத்திற்கு அவரின் ஒத்துழைப்பைக் கேட்கும் இப்பகுதி மிகுந்த வியப்பையும் உணர்வுப்பெருக்கையும் ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.

எப்போதும் கடவுளைச் சார்ந்து அவருடனே இருந்த மரியா கடவுளின் திருவுளமாகிய உண்மை மற்றும் பிறரன்பை எதிர்க்கும் எதுவும் இல்லை என்பதை ஆழமாக உணர்ந்தவர் என்றும், அவர் பெற்ற பேறுகளை எல்லாத் தலைமுறைகளும் பாடும் பேறுபெற்றவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நமது மீட்பராகிய இயேசுவை நமக்களித்த அமல அன்னையைக் குறித்து நாம் மகிழ்வடைவோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வினை நாம் வாசிக்கும்போது இப்பகுதி நமக்கு நல்ல பலனைத்தரும் என்று கூறித் திருப்பயணிகளை திருவிவிலியத்தை வாசிக்க அழைப்புவிடுத்தார்.

யூபிலி ஆண்டில் திறக்கப்படும் புனித கதவிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் நமது இதயத்தையும் மனதையும் கடவுளுக்காக திறப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இன்று அல்லது இந்த வாரத்திற்குள் முழுமையான பாவமன்னிப்பு திருவருளடையாளம் பெறுங்கள் ஏனெனில், கடவுள் எல்லாவற்றையும் எல்லாரையும் மன்னிக்கின்றார் இதன் வழியாக அமல அன்னையின் கரங்களில் நாம் மகிழ்ந்திருப்போம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2024, 12:58

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >